வாக்களிப்பு நிலையங்களுக்கு தொலைபேசிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் : மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை
“இந்த முறை பரபரப்பான ஜனாதிபதித் தேர்தல் என்பதால், சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இதன்படி, வாக்களிக்கும் காலப்பகுதியில், வாக்காளர் அல்லது வேட்பாளர் ஒருவர், தனது தொலைபேசியை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால், அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். இவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவதற்கும் இடமுண்டு” என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,
“வாக்களிப்பு நேரத்திற்குள், எந்தவொரு வாக்காளரும் அல்லது வேட்பாளரும், தமது தொலைபேசிகளுடன் வாக்குச் சாவடிக்கு செல்லக் கூடாது என்று தடை விதித்துள்ளோம்.
அவர்கள் அங்கே புகைப்படம் எடுப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தபால் வாக்களிப்பின்போது, இவ்வாறு வாக்குச் சீட்டுக்களைப் புகைப்படம் எடுத்தவர்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது மிகவும் பரபரப்பான தேர்தலாகும்.
எனவே, யாரும் இவ்வாறு செய்யாமல் இருக்குமாறு அறிவுறுத்துகின்றேன்” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )