உள்நாடு

புத்தளத்தில் நண்பகல் வரை 42% வாக்குகள் பதிவு..!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்றுநடைபெற்று வரும் நிலையில், புத்தளம் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 42 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் நிலைவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், புத்தளம் மாவட்டத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருவதுடன் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இன்றைய தினம் தேர்தல் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் , வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை. மிகவும் சுமுகமான முறையில் மக்கள் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் ஐந்து தேர்தல் தொகுதிகளில் 470 வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும், வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸாரும், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரம் பெற்ற தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், இன்று மாலை வாக்களிப்பு நிறைவு பெற்றவுடன் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையங்களாக தயார் செய்துள்ள புத்தளம் சென். ஆன்றூஸ் மத்தியக் கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி மற்றும் செய்னப் ஆரம்ப பாடசாலை என்பனவற்றிற்கு எடுத்துவரப்படவுள்ளதுடன், குறித்த வாக்கு எண்ணும் நிலையங்களிலும் , அந்த பகுதியை சுற்றியுள்ள வீதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் , ஆனமடு , சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டிய ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் 6 இலட்சத்து 63 ஆயிரத்து 673 பேர் இம்முறை வாக்காளிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் புத்தளம் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 74 ஆயிரத்து 159 பேரும், ஆனமடுவ தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 202 பேரும், சிலாபம் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 178 பேரும், நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 3 ஆயிரத்து 847 பேரும், வென்னப்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 286 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், 58 கணக்கெடுப்பு நிலையங்ளும், 8 தபால் மூல கணக்கெடுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14,967 அரச ஊழியர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூலமான வாக்களிப்புக்களை செய்துள்ளனர்.

தபால் மூல வாக்குகள் மாலை 7.00 மணிக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அது போன்று ஏனைய வாக்குகள் எண்ணும் பணிகள் இரவு 8.00 மணயளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர்; குறிப்பிட்டார்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *