புத்தளத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 470 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இன்று (20) காலை எடுத்துச் செல்லப்பட்டன.
புத்தளம் சென். அன்றூஸ் மத்தியக் கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி, செய்னப் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிலிருந்து குறித்த வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பன பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுமதியளிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டி மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பவற்றை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் போது புத்தளம் நகரம் எங்கும் பொலிஸாரும், விஷேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பூக்குளம் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் என்பன வில்பத்து வனப்பகுதி ஊடாக கொண்டு செல்ல தேவையான அனுமதியினை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பெற்றுள்ளதாகவும், கற்பிட்டி முகத்துவார வாக்குச் சாவடிக்கு படகுகள் மூலம் அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் , ஆனமடு , சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டிய ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் 6 இலட்சத்து 63 ஆயிரத்து 673 பேர் இம்முறை வாக்காளிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.
இதில் புத்தளம் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 74 ஆயிரத்து 159 பேரும், ஆனமடுவ தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 202 பேரும், சிலாபம் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 178 பேரும், நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 3 ஆயிரத்து 847 பேரும், வென்னப்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 286 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், வாக்களிப்பதற்காக 470 வாக்களிப்பு நிலையங்களும், 58 கணக்கெடுப்பு நிலையங்ளும், 8 தபால் மூல கணக்கெடுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்டச் செயலாளர் கூறினார்.
மேலும், 14,967 அரச ஊழியர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூலமான வாக்களிப்புக்களை செய்துள்ளனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் 15,270 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 14967 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 303 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்குகள் மாலை 7.00 மணிக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அது போன்று ஏனைய வாக்குகள் எண்ணும் பணிகள் இரவு 8.00 மணயளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர்; குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த புத்தளம் மாவட்ட செயலாளர், நாளை சனிக்கிழமை அனைத்து வாக்காளர்களும் நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறும், மிகவும் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக மாவட்ட மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
(ரஸீன் ரஸ்மின்)