கண்டி மாவட்டத்தில் சகல தேர்தல் நடவடிக்கைகளும் பூர்த்தி; மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன்
கண்டி மாவட்டத்தில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 11 இலட்சத்து 85 ஆயிரத்து 602 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார்.
இவர்களுக்காக 890 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்த வாக்காளர்கள் 11 இலட்சத்து 91ஆயிரத்து 399 பேர். இதில் 55 ஆயிரத்து 797 பேர் தபால் மூலம் வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்தனர். தபால் மூலம் வாக்களிக்கப் தகுதி பெற்றோருள் 80.1 வீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
890 வாக்களிப்பு நிலையங்களுக்கு கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கண்டி மாவட்டத்தில் மொத்தம் 13 தொகுதிகளின் பாதுகாப்பிற்காக 3000 பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொல்கொல்ல கூட்டுறவு பயிற்சி நிறுவனம், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகம், பொல்கொல்ல மகாவலி தேசிய கல்விகூடம், பொல்கொல்ல மாதிரி பாடசாலை ஆகிய இடங்கள் வாக்கெண்ணும் நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் மொத்தம் 124 அறைகளில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.