யானைகளினால் ஏற்படும் சேதத்தினை தடுப்பதற்கான விஷேட கலந்துரையாடல்
பிரதேச மட்ட யானைகள் பாதுகாப்பு மற்றும் யானை மனித மோதல்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டமானது நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் பே.பிரணவரூபன்; தலைமையில் அண்மையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தின்போது, நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குற்பட்ட பகுதிகளில் யானைகள் மனித மோதல்கள் மற்றும் யானைகளின் இறப்பை தடுத்து பாதுகாப்பது பற்றியும், யானைகளினால் ஏற்படும் சேதத்தினை தடுப்பதற்கு ஏற்ற வழிமுறைகளான, யானைகளை வெடி மூலம் விரட்டல், முட்கள் உள்ள பழ மரங்களை நடல், திண்ம கழிவு கொட்டப்படுகின்ற இடங்களை இல்லாமல் செய்தல் அத்தோடு சொறிக்கல்முனை எல்லை வீதிகளுக்கு மின்குமிழ் பொருத்துதல் மற்றும் பாதைகளின், இரு மருங்கிலும் உள்ள புதர்களை அழித்து சுத்தம் செய்தல் போன்ற விடையங்கள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ.சிவம், பிரிவுக்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுவட்ட காப்பாளர் லோரன்ஸ் கலந்து கொண்டார். மேலும் கமநல சேவைகள் அமைப்புக்கள், சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை பிரதிநிதிகள், கமநல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கோட்டக்கல்வி பணிமனையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர், காணி பயன்பாட்டு வெளிக்க உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்கள் சமூகமளித்திருந்தனர்.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம்)