உள்நாடு

வட மத்திய மாகாண சபையில் காணாமற் போன 19 வாகனங்கள் 10 மோட்டார் சைக்கிள்கள்

வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரதான அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு உள்ளிட்ட அலுவலகங்கள் பலவற்றில் இருந்த வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பனவைகளே காணாமல் போயுள்ளது.

காணாமல் போயுள்ள 19 வாகனங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பயன்படுத்திய கெப் வாகனங்கள் மற்றும் ஜீப் வாகனங்கள் என்பன உள்ளடங்குவதுடன் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுச் சான்றிதழ்களின்படி வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான இந்த வாகனங்கள் மாகாண சபையில் காணப்படவில்லை என கண்காணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *