உள்நாடு

சகல இன மக்களினதும் ஆதரவோடு சஜித் பெரு வெற்றியீட்டுவார்; கஹட்டோவிட்ட கூட்டத்தில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நம்பிக்கை

இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனநாயக ரீதியில் தீர்வுகளை தரக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாசவே.அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்.ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுங்கள் என களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 17 ம் திகதி இரவு கஹட்டோவிட்டவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் அத்தனகலைத் தொகுதி அமைப்பாளர் சந்திரசோம சரணலால் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் ரணில் விக்கிரமசிங்கவின் பிழையான நடவடிக்கைகள் காரணமாக அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

இது மிகவும் சிக்கலானது.சவால்கள் நிறைந்தது.இந்த நிலையில் சரிவு கண்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திறன் வாய்ந்தவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே உள்ளனர்.சஜித் பிரேமதாசவை வெற்றியீட்டச் செய்வதன் மூலம் இதனைச் சாதிக்க முடியும்.எனவே அனைவரும் ஒன்றுபட்டு அவரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

சகல இன மக்களினதும் நம்பிக்கையை வென்றுள்ள அவர் அனைத்து மதத்தினருக்கும் சமமான முறையில் பணியாற்றுவார்.முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அவர் தீர்த்து வைப்பார்.அவர் மேல் நம்பிக்கை வையுங்கள்.அவரை 22 ம் திகதியன்று இந்த நாட்டின் ஜனாதிபதி ஆக்குங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட மேலும் பலரும் இங்கு உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *