கமிந்துவின் சதத்தால் முதல் நாளில் இலங்கை ஆதிக்கம்
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி கமிந்து மென்டிஸ் பெற்றுக் கொடுத்த சதத்தின் உதவியுடன் முதலாவது நாள் ஆட்டநேர முடிவின் போது 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (18) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்திருந்தது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்தது.
அதற்கமைய ஆரம்ப வீரர்களாகக் களம் நுழைந்த திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றைய வீரரான பெத்தும் நிஷங்க 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்தடுத்து வந்த தினேஷ் சந்திமால் (30) , மெத்யூஸ் (37), அணித்தலைர் தனஞ்சய டி சில்வா (11) ஓட்டங்களுடன் வெளியேறினர்.
இருப்பினும் இலங்கை அணிக்காக சமீப காலமாக ஓட்டங்களை குவித்துவரும் கமிந்து மென்டிஸ் நிலைத்திருந்து ஓட்டங்களைச் சேர்க்க, அவருக்கு சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தார் குசல் மெண்டிஸ். இந்நிலையில் கமிந்து மெண்டிஸ் 7ஆது இன்னிங்ஸில் தொடரான 7ஆவது அரைச்சதம் கடந்து அசத்தியதுடன் தனது 3ஆது சர்வதேச டெஸ்ட் சதத்தiயும் பதிவு செய்து மிரட்டினார்.
அவருக்கு அதிரடியில் ஒத்துழைப்பு கொடுத்த குசல் மெண்டிஸ் அரைச்சதம் பெற்று 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சதம் கடந்த கமிந்து 114 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 88 ஓவர்களுக்கு முகம் கொடுத்து 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
களத்தில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 14 மற்றும் 00 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளனர். பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓ ரூக் 3 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நாளை (19) போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)