விபச்சாரத்துக்கோ தன்னினச் சேர்க்கைக்கோ சட்ட ரீதியான அனுமதி வழங்க மாட்டோம்; கஹட்டோவிட்ட கூட்டத்தில் விஜித ஹேரத் எம்.பீ உறுதி
“அனைத்து இன மக்களும் ஐக்கியத்துடன் வாழும் தூய்மையான கலங்கமற்ற ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதே, தேசிய மக்கள் சக்தியின் உன்னத நோக்கமாகும்” என, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
கஹட்டோவிட்டவில் நேற்று (17) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, அலி சப்ரி, 2025 பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என்று கூறியுள்ளார். நான் கேட்கிறேன். அப்போதைக்கு அலி சப்ரியும் இல்லை. ரணிலும் இல்லை. பெப்ரவரியில் ஐனாதிபதி யார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்போது அநுர குமார திஸாநாயக்க தான் இந்நாட்டின் ஜனாதிபதி. இதை அலி சப்ரி மறந்து விட வேண்டாம்.
மாலிமா வந்தால், நாடு பற்றி எரியும். பன்ஸல, பள்ளி, கோவில்கள் இல்லாமல் ஆகும். முஸ்லிம்களின் மத உரிமைகள் இல்லாமல் போகும். இவ்வாறு ஏனைய கட்சிக்காரர்கள் பொய்ப்பிரசாரம் பரப்பி வருகின்றனர். அத்துடன், 9 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றுவதாகவும் கூறுகின்றனர். நாம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு எமது அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
பௌத்த மதத்தைப் போன்றே ஏனைய சகல மதங்களுக்கும் முன்னுரிமை வழங்குவோம். நாம் விபச்சாரத்தை அமுலுக்குக் கொண்டு வருவதாகவும், அதனுடன் தொடர்புடைய ஏனைய அம்சங்களுக்கும் இடம் ஒதுக்கிக் கொடுப்போம் என்றும் மக்களை அச்சுறுத்துகின்றனர். நாம் கருணை காருண்யம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எமது அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்கு பொய்களை உரைத்து வருகின்றனர். எவ்வாறான பொய்களைக் கூறினாலும், அநுரவே ஜனாதிபதியாக வரப்போகிறார். அநுர வெல்கிறார். ரணில் தோற்கிறார். இதுதான் உண்மை.
ரணில் 2010 இல் பொன்சேகாவை களமிறங்கினார். 2015 இல் சிறிசேனவை களமிறங்கினார். ரணில் தேர்தலில் போட்டி இடவுமில்லை. போட்டியிட்டிருந்தாலும் வெல்லப் போவதுமில்லை. ரணிலுக்கு இம்முறையும் தேர்தலில் நிச்சயம் தோல்வியே. இதை மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.நாம் எதற்கும் நிலை தடுமாறவில்லை. நன்கு சுய புத்தியோடு தான் இருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறோம். 21 ஆம் திகதி தேர்தல் முடிந்த கையோடு, 22 ஆம் திகதி காலையிலேயே மக்களுக்கு நல்ல செய்தி வரும். 22 ஆம் திகதி சூரியன் உதயமாகும்போது, நாட்டு மக்களின் விடிவிலும் சூரியன் உதயமாகும். 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவானார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி உங்கள் காதுகளுக்கு எட்டும்.
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆனவுடன் பாராளுமன்றத்தைக் கலைப்பார். அநுரவுடன் சேர்த்து நாம் நான்கு உறுப்பினர்கள். பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை இரண்டு மாதத்திற்கு நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்போம். இக் காலப்பகுதிக்குள், ஆண் அல்லது பெண் பிரதமர் ஒருவரை நியமிப்போம்.மாலிமா, தேசிய ஒற்றுமைக்காக களமிறங்கியுள்ள ஒரு கட்சி. எமது அரசில் எந்தவொரு இன வாதச் செயல்களுக்கும் இடமில்லை. மீண்டும் திகன, அழுத்கம போன்ற இடங்களில் ஏற்பட்ட கலவரங்களைப் போன்று இடம் வைக்காமல், அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எம்மிடம் இன மத மொழி பேதமில்லை. இங்கு சிங்கள முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.
இந்த ஒற்றுமை 21 ஆம் திகதிக்குப் பிறகு எமது அரசிலும் நிச்சயம் கட்டிக் காக்கப்படும். அதற்கான சகோதரத்துவ நலத்திட்டங்கள் பலவற்றையும் இப்போதே தயாரித்து வருகின்றோம். தேசிய ஒற்றுமைக்கான ஒரு அரசாங்கத்தை அமைத்து, அதன் மூலம் ஐக்கியத்துடன் மக்கள் வாழும் ஒரு நாட்டைக் கட்டி எழுப்புவோம். மாலிமாவின் தேவையும், உண்மையான நோக்கமும் அதுதான். இந்த இலங்கை மண், இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சொந்தம் என்பதை, உறுதியாகவே எமது அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆட்சியில் பிரகடனப்படுத்துவோம்” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )