உள்நாடு

“மாற்றம் கோரும் தேசிய மக்கள் சக்தி முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்..!” – கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்

மாற்றம் வேண்டுமென தேசிய மக்கள் சக்தியினர் கூறித்திரிகின்றனர்; இவ்வாறு கூறுவோர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை (15) கிண்ணியாவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

“மாற்றம் வேண்டுமென தேசிய மக்கள் சக்தியினர் கூறித்திரிகின்றனர். இவ்வாறு கூறுவோர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். எம்.பிமார்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போகிறார்களாம். ஊழல்களை ஒழிக்கப்போகிறார்களாம். கள்வர்களைக் கைது செய்யப்போகிறார்களாம். நான் ஒன்றைக் கூறுகிறேன். தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எம்.பிக்கள் நாற்பது பேர் பெறும் ஓய்வூதியத்தை முதலில் நிறுத்துங்கள். கள்வர்களைக் கைது செய்வதற்கு சட்டம், பொலிஸ், குற்றவியல் திணைக்களங்கள் உள்ளன. அங்கே சென்று உரியவர்களைப் பற்றி முறையிடுங்கள். நீதிமன்றங்களுக்குச் சென்று ஊழல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுங்கள். இவற்றை எல்லாம் செய்யாமல், ஜனாதிபதியாக்கினால்தான், இதைச்செய்யலாம் என்பது வேடிக்கையே.

ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெற்ற வீசா ஊழல்களை ரவூப் ஹக்கீம், சுமந்திரன் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரே வழக்காடி நிறுத்தினர். புற்றுநோய் மருந்து மோசடியில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைதாவதற்கு பொதுமக்களே நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இவற்றைத் தடுக்க தேசிய மக்கள் சக்தியினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்?

எவற்றையுமே செய்யாத இந்த தேசிய மக்கள் சக்தியினர்தான், முஸ்லிம்களுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். வடக்கில் 75 பள்ளிவாசல்களைப் புனரமைத்தோம். 25ஆக இருந்த பாடசாலைகளை 99 பாடசாலைகளாக அதிகரித்து, பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கு உதவியது நாங்களே. இருபதாயிரம் குடும்பங்களை மீளக்குடியமர்த்தியதும் நாங்களே. ஆனால், இவர்கள் எதுவுமே செய்யாமல், இன்று வாக்குகளுக்காக வேறு வேசத்துடன் எம்மக்களை வேட்டையாட வந்துள்ளனர்” என்று கூறினார்.

(ஊடகப்பிரிவு- ரிஷாட் பதியுதீன் பா. உ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *