உள்நாடு

பொருளாதாரத்தை குணப்படுத்தாமல் ஓடிச் சென்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.தாதியர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க

கவலைக்கிடமாக இருந்த நோயாளி குணமடைந்து வரும் நிலையில், மருத்துவரை மாற்றி, தகுதியற்ற மருத்துவரிடம் ஒப்படைக்கக் கூடாது!

 பொருளாதாரத்தை குணப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றாமல் ஓடிச் சென்ற அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 இலங்கை பொருளாதாரம், என்ற நோயாளி அறுவை சிகிச்சையின் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 பொருளாதாரத்தை முழுமையாக மீட்க இன்னும் சில ஆண்டுகள் தேவை.

 நாட்டின் பொருளாதாரத்தில் தாதியர் சேவையை முக்கிய அங்கமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

  • 2024 தாதியர் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

கவலைக்கிடமான நிலையில் இருந்த நோயாளி அவசர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வரும் நிலையில், அந்த வைத்தியரை மாற்றி , தகுதியற்ற வைத்தியரின் கீழ் சாதாரண வார்டில் அனுமதிக்கும் தவறை செப்டெம்பர் 21ஆம் திகதி இந்நாட்டு மக்கள் செய்யக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியரின் சான்றிதழை இலங்கை மருத்துவ சபைக்கு அறிவித்து இரத்துச் செய்ய முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை குணப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றாமல் ஓடிய அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று (17) நடைபெற்ற அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தின் ‘2024 தாதியர் மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாராஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாணத்துக்கான பிரதான சங்கநாயக்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தின் முன்மொழிவுகள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தாதியர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆபத்தான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம் இரண்டு வருடங்களில் மீண்டு வர முடியும் என எவரும் நினைக்கவில்லை. ஆனால் இலங்கையின் பொருளாதாரம் என்ற நோயாளிக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டிற்குள், மக்களின் வாழ்க்கைச் சுமையை எளிதாக்கி நோயாளியை சாதாரண வார்டில் அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

2026 இல் நாட்டை துரித அபிவிருத்திக்கு கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதன் மூலம் நோயாளியை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில், இலங்கையில் தாதியர் சேவையின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும், நவீன தொழில்நுட்ப அறிவுடன் கூடிய பயிற்சி பெற்ற தாதியர்களை நாட்டில் உருவாக்கத் தேவையான வசதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்காலத்தில், அதிகரித்து வரும் உலக சனத்தொகையுடன், ஜப்பான், கொரியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் தாதியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை தாதியர்களை பயிற்றுவித்து, பரிந்துரை செய்யும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

2024 தாதியர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

‘‘இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம் என்பது மக்களின் எதிர்காலமாகும். எனவே, இந்த வாய்ப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். அன்று இந்த நாடு இருந்த நிலைமையை நான் புதிதாகக் கூறத் தேவையில்லை.

மருத்துவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் என்ன நடக்கும், அதுகுறித்து இலங்கை மருத்துவ சபைக்கு முறையிடலாம். அத்துடன், அவர்களின் மருத்துவ சான்றிதழை இரத்து செய்யலாம். 2022 இல் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது என்று கூறியவர்களுக்கும், நாம் அதை செய்ய வேண்டாமா என்று கேட்க விரும்புகிறேன்.

உடல் ஆரோக்கியம் ஒருவரை மாத்திரமே பாதிக்கிறது. ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, எத்தனை பேர் பட்டியினால் இறப்பார்கள்? எனவே, ஆபத்தில் பொறுப்பேற்க மறுத்த தலைவர்களை நிராகரிக்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் ஒரு நாடு என்ற வகையில் நாம் அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை பின்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிடும் என்று யாரும் நினைக்கவில்லை.

அதற்காக கடினமான தீர்மானங்களை எடுத்தேன். ரூபாவை பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த செயல்பட்டேன். இன்னும் பொருளாதார சிக்கல்கள் உள்ளன. உலகில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த வேறு எந்த நாடும் நம் நாட்டைப் போன்று வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. 07 வருடங்களாக புதிய ஆடைகள் வாங்கவில்லை என ஒருவர் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தேன். அவர்கள் விடுமுறையில் வெளியே செல்லவில்லை. ஆனால் எமது நாட்டு மக்கள் தற்போது அனுராதபுரம், நுவரெலியாவிற்கு விடுமுறையில் செல்ல முடியும். இந்தப் பொருளாதார வளர்ச்சியை படிப்படியாக அடைந்தோம்.

இலங்கைப் பொருளாதாரம் என்ற நோயாளி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து, நோயாளியை சாதாரண வார்டில் அனுமதிக்கலாம். 2025 ஆம் ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நோயாளியை சாதாரண வார்டில் சேர்க்க முடியும் என்று நம்புகிறேன். 2026 ஆம் ஆண்டிற்குள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவதே எமது நோக்கம்.

IMF என்ற மருத்துவமனையிடம் நான் கதைத்தேன். நோயாளியை குணப்படுத்துவதற்கு கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். அவசரமாக தேவைப்படும் மருந்துகளையும் ஆக்ஸிஜனையும் அவர்கள் வழங்குகிறார்கள். எனவே, அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால், நோயாளியை குணப்படுத்த முடியாது.

வரிகளைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. அப்போது வருமானம் குறையும். அப்போது ஒக்சிஜன் குறைந்துவிட்டால், நோயாளிக்கு ஆபத்து ஏற்படும்.

எனவே நோயாளி குணமடைந்து வரும் நிலையில், வைத்தியரை மாற்றி தகுதியற்ற வைத்தியரிடம் நோயாளியை ஒப்படைப்பதா என்பதை, இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்று நாட்டின் பொருளாதாரம் ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டளவில், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் அதிகரிப்புடன் ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடையும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படைப் பணிகளை 2026ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க நான் எதிர்பார்க்கிறேன். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2027 வரை அதற்கான கால அவகாசம் எமக்குக் கிடைத்துள்ளது.

ஆனால் 2025 ஆம் ஆண்டில், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதன் மூலம் 2026 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை விரைவாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். அதன்போது, நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்வது மிகவும் முக்கியம்.

விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக நாம் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தை நான் இங்கு குறிப்பிடமாட்டேன். ஆனால் நாம் மருத்துவ சுற்றுலாத் துறை பற்றி கதைக்க வேண்டும். அதற்காக மருத்துவமனைக் கட்டமைப்பை முன்னேற்ற வேண்டும். உலக மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சுகாதாரத் துறையில் ஏற்படும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உலகில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜப்பான், கொரியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவில் அந்த வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாதியர் தொழில்துறை தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது. அதற்குத் தேவையான பயிற்சியை நமது தாதியர்களுக்கு வழங்க வேண்டும். அதன்போது புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளை அதிகரிக்க முடியும்.

தேவையெனில், வெளிநாட்டு விரிவுரையாளர்களை பெற்றுக் கொள்ளலாம். ஜப்பானில் அதிகரித்து வரும் சனத்தொகையால், எதிர்காலத்தில் தாதியர்களுக்கான தேவை, சுமார் 02 இலட்சம் ஆக அதிகரிக்கலாம். மேலும், இலங்கையிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்காக நாம் Care Home என்ற கருத்தை உருவாக்கலாம். மேலும், சமூக சேவைகள் அமைச்சில் முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான தனிப் பிரிவு பேணப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, நோயாளி ஒரே நேரத்தில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதில்லை. மேலும், நோயாளியை சமூக சேவை விரிவுரையாளரிடம் ஒப்படைக்கவும் வேண்டாம். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுத்துச் சென்று நாட்டைக் கட்டியெழுப்புவோம்.’’ என்று தெரிவித்தார்.

மேல் மாகாணத்துக்கான பிரதான சங்கநாயக்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத் தலைவருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

‘‘வெற்றுக் காகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த தாதியர் சான்றிதழுக்கு மதிப்பளித்து, தாதியர் டிப்ளோமாவை வழங்கியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவர் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்துக்குள் 29 வருடங்களாக நாங்கள் முயற்சி செய்து வந்த தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ நடவடிக்கை எடுத்தார். இதன்மூலம் ஐம்பது இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டு பெற்றுக்கொள்ளும் பட்டதாரிச் சான்றிதழை தற்போது இந்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் பதினைந்தாயிரம் ரூபாவாக இருந்த தாதியர் சீருடை கொடுப்பனவை முப்பதாயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கினார். அதன்படி இந்த ஆண்டு பத்தாயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு மேலும் ஐயாயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரச சேவையின் சம்பள அதிகரிப்பு ஜனவரி மாதம் முதல் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஆகஸ்ட் மாதம் உறுதிப்படுத்தினார். இவை எதுவுமே தேர்தல் வாக்குறுதிகள் அல்ல, அவர் சொல்வதைச் செய்யும் தலைவர்.

இப்போது சுமார் அறுபதாயிரம் இளைஞர்களின் உயிர்களைப் பறித்த குழுவைச் சுற்றிப் பேரணிகள் உருவாகியுள்ளன. ஒரே காகிதத் துண்டில் மருத்துவமனைகளை மூடிய, உயிர்களின் மதிப்பை உணராத குழுக்களைச் சுற்றி இன்று அலைகள் உருவாகியுள்ளன. அன்று கொல்லப்பட்ட இளம் உயிர்களில் தாதியர்களும் இருந்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது நாங்கள் குழிக்குள் இருந்தோம். அவரது கடின உழைப்பால் இன்று ஓரளவு மேல்நோக்கி வந்துள்ளோம்.

நீங்கள் மீண்டும் அந்தக் குழிக்குள் விழுவீர்களா அல்லது அதிலிருந்து வெளியே வருவீர்களா என்பதை இந்த ஒரு சில நாட்களில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அன்று முடியாது என்று நாட்டைப் பொறுப்பேற்காமல் ஓடிவிட்டனர். நீங்கள் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.’’ என்றார்.

இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆகியோரும் கலந்து கொண்டு இதன்போது உரையாற்றியதுடன், அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தாதியர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *