சீனன்கோட்டை இளம் சமூக சேவையாளர் சராபத் நிஸாம் காலமானார்
பேருவளை சீனங்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் ஆசிகுர் ரஸுல் குழு அங்கத்தவரும், இளம் வாலிப வர்த்தகரும், இளம் சமூக சேவையாளருமான சராபத் நிஸாம் தனது 23 ஆவது வயதில் காலமானார்.
சீனங்கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட நிர்வாகக் குழு உறுப்பினர் அல்-ஹாஜ் நிஸாமின் புதல்வரான இவரது ஜனாஸா கடந்த ஞாயிற்றுக்கிழமை (2024-09-15) மாலை 4.00 மணியளவில் சீனங்கோட்டை பாஸிய்யா ஜும்மா பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கத்தில் சங்கைமிகு சாதாத்மார்கள், கலீபாக்கள், உலமாக்கள், அரசியல்வாதிகள், அரபுக் கல்லூரி அதிபர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பெருமளவிலானோர் பங்குபற்றினர்.
மாத்தறை, மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர், மெளலவி அஸ்ஸெய்யித்- பஸ்மின் மெளலானா (முர்ஸி) ஜனாஸா தொழுகை நடாத்த சங்கைக்குரிய அஷ்ஷெய்க். மெளலவி ஸக்கி அஹமட் (அஷ்ரபி) பின் அஷ்ஷெய்க். காலிப் அலவி ஹாஜியார் (அலவியதுல் காதரிய்யா) துஆ பிரார்த்தனை நடாத்தினார்.
இறைத்தூதர், முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடும் ஆசிகுர் ரஸுல் குழுவின் முக்கிய அங்கத்தவராக இருந்து, ஷாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சிக்காக தனது இளமை பருவத்தை முழுமையாக அர்ப்பணித்த ஒருவராவார்.
சீனங்கோட்டை, அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான முஹம்மத் சராபத் சீனங்கோட்டை கங்கானங்கொடை முஹம்மத் ஸாலி முஹம்மத் நிஸாம், முஹம்மத் ஸம்ஸுதீன் பாத்திமா நவாஸா தம்பதிகளின் புதல்வராவார்.
இவரது மறைவு குறித்து, சீனங்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் அனுதாபத் செய்தியொன்றை விடுத்துள்ளது. அச்செய்தியில் கூறியுள்ளதாவது,
ஷாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சியில் தமது இளமை பருவத்தை தியாகத்தோடு அர்பணித்த சராபத் நிஸாமின் திடீர் மறைவு பிரதேசத்திற்கும், குறிப்பாக வாலிபர் ஹழரா ஜமாஅத்திற்கும், ஷாதுலிய்யா தரீக்காவிற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பேரிழப்பாகும்.
ஆசிகுர் ரஸுல் குழுவின் அங்கம் வகித்து ரஸுல் ஸல் அவர்களின் புகழைப்பாடி இளமை பருவத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி, ரஸுல் ஸல் அவர்களின் உயரிய வாழ்க்கை முறையை பின்பற்றி தரீக்காவின் ஷேகுமார்கள் காட்டிய பாதையில் வாழ்நாளை கழித்து இளம் வயதிலேயே இறையடி சேர்ந்தார்.
“உயிருள்ள வரையில் மீலாதை மதிப்போம், உயிர் பிரிந்த நிலையில் கப்ரிலும் ரசிப்போம்” என்று நபி புகழ் பாடிய சராபத் நிஸாம் நபி ஸல் அவர்கள் அவதரித்த தினமான, மீலாத் தினத்தில் இறையடி சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனங்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலின் புனித மெளலித் மஜ்லிஸ் நடைபெறுகின்ற தமாம் நிகழ்வில் நபி புகழோடு இவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.
(பேருவளை பீ.எம் முக்தார்)