உள்நாடு

சஜித் பிரேமதாச ஆட்சியில் பேருவளை முழுமையான அபிவிருத்தி; பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜெமீல்

சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் பேருவளை ஆஸ்பத்திரி அங்க சம்பூர்ண ஆஸ்பத்திரியாக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்த பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் கடந்த ஆட்சி காலத்தில் பேருவளை மக்களை பழிவாங்கும் வகையில் இடை நிறுத்தப்பட்ட 7 மாடிகளை உள்ளடக்கிய புதிய கட்டிடத் தொகுதியின் நிர்மாண வேலைகளையும் ஆரம்பிப்போம் என்றும் கூறினார்.

பேருவளை நகர சபை பகுதியில் நடைபெற்ற பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, யார் என்ன சொன்னாலும், எவர் எதைச் செய்தாலும் இந்த தேர்தலில் ஸஜித் பிரேமதாஸவின் வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. முழு நாட்டு மக்களும் நாட்டை ஸஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்க முடிவு செய்து விட்டனர். ஸஜித் பிரேமதாஸவுக்கே வெற்றி என்பதை முழு நாடும் அறிந்து விட்டது. வேறு வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடிவு செய்த மக்கள் தமது முடிவினை மாற்றி இன்று ஸஸித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

பேருவளை தொகுதி மக்களின் மூன்று முக்கிய தொழில்துறைகளான, இரத்தினக்கல், கடற்றொழில், உல்லாசப் பயணத்துறைகளை முன்னேற்ற வேண்டி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். எமது ஜனாதிபதி வேட்பாளர் ஸஜித் பிரேமதாஸவுடன் இப்பகுதி இரத்தினக்கல் வர்த்தகர்கள் பேச்சுவார்த்தை நடாத்தி இதிலுள்ள பல முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தார்கள். இரத்தினக்கல் வர்த்தக துறையை தனது ஆட்சியில் கட்டியெழுப்புவதாக அவர் உறுதியும் அளித்துள்ளார்.

இரத்தினக்கல் வர்த்தகத் துறையில் உள்ளோர், மீனவர்கள், உல்லாசப் பயணத்துறை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று ஸஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக அணி திரண்டுள்ளனர்.

பேருவளை ஆஸ்பத்திரிக்கு 7 மாடிகளை கொண்ட புதிய வார்ட் தொகுதியை அமைக்க அடிக்கல் நாட்டினோம். அதற்காக பல கோடி ரூபாக்களையும் ஒதுக்கினோம். ஒப்பந்தக் காரர்களினால் 10 கோடி ரூபா வரை செலவிட்டு நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பேருவளை மக்களை பழிவாங்கும் தீய நோக்கோடு கடந்த அரசு அதை தடுத்து நிறுத்திவிட்டது. என்றாலும், 21 ம் திகதி தேர்தலில் ஸஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவார். இவரின் ஆட்சியில் பேருவளை ஆஸ்பத்திரியை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவோம். புதிய கட்டிடங்களின் நிர்மாண வேலைகளையும் பூர்த்தி செய்வோம்.

கல்வி, சுகாதாரத்துறைகளின் முன்னேற்றத்தில் நாம் விஷேட கவனம் செலுத்துவோம். இப்பகுதி பாடசாலைகளில் நிலவும் பலத்த ஆசிரியர் பற்றாக்குறையையும் தீர்த்து வைப்போம். இளைஞர் – யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வு காண்போம் என்றார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *