எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாக்காளர்களாகப் பதிவு..!
ஜனாதிபதி தேர்தலில் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் பத்து லட்சத்து இருபத்து நாலாயிரதது இருநூற்றி நாற்பத்து நான்கு பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளதுடன் பண்டாரகம தேர்தல் தொகுதி 1,59,784 வாக்காளர்களைக் கொண்ட மாவட்டத்தின் பெரிய வாக்காளர் தொகுதியாக விளங்குகின்றது.
களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, களுத்துறை, பாணந்தறை பண்டாரகம தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்கள் விளங்குகின்றன.
களுத்துறை மாவட்டத்தின் எட்டு தேர்தல் தொகுதிகளான பண்டானகம-1,59,784, ஹொரண-1,46,301, பாணந்துறை-1,28,281, பேருவளை-1,33,306, களுத்துறை-1,33,091, மத்துகம-1,23,841, அகலவத்தை-1,09,393, மற்றும் புளத்சிங்கள-90,247 வாக்காளர்களைக் கொண்டுள்ளன. மாவட்டத்தில் ஆகக்கூடிய வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக பண்டாரகமவும் குறைந்த வாக்காளர்களைக் கொண்டதாக புளத்சிங்களவும் பதிவாகியுள்ளன.
மேல்மாகாணத்தில் பதினைந்து தேர்தல் தொகுதிகளைக் கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 1,765,351பேர் வாக்காளர்களாகப் பதிவாகியுள்ளனர்.இந்த மாவட்டத்தில் ஹோமாகம-215,076 அதிக வாக்காளர் தொகுதியாகவும் கொழும்பு மேற்கு-42,474 குறைந்த வாக்காளர் தொகுதியாகவும் பதிவாகியுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் களுத்தறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியான மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன தலைமையிலான துறைக்குப் பொறுப்பான அதிகாரகளினால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மாவட்டத்தின் தேர்தல் கடமைகளுக்காக 8899 அரச சேவையாளர்களும் முப்பதாயிரம் பொலிசாரும் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் திடீர் வெள்ள அனர்த்தம் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் கடந்த-2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 482,920 வாக்குகளையும் மற்றும் களமிறங்கிய பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச 284,213 வாக்குகளையும் அநுர குமார திசாநாயக 27,681வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் களுத்துறை மாவட்டத்தில் 2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ-22,586, சஜித் பிரேமதாச-9,172, அநுர குமார திசாநாயக-1,912 தபால் மூல வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேல் மாகாணத்தில் பதிமூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.இந்த மாவட்டத்தில் மஹர- 175,110 அதிக வாக்காளர் தேர்தல் தொகுதியாகவும் களனி-97,840 குறைந்த வாக்காளர் தேர்தல் தொகுதியாகவும் பதிவாகியுள்ளன.
இலங்கையில் கம்பஹா மாவட்டம்- 1,881,129 அதிகளவில் வாக்காளர் பதிவான மாவட்டமாகவும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி மாவட்டம்-3,06,081 குறைந்த வாக்காளர் பதிவாகியுள்ள மாவட்டமாகவும் விளங்குகின்றது.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)