உள்நாடு

ரணில் அரசு பெற்ற கடன்களை சஜித் சுமக்க வேண்டிய நிலைமை

கிண்ணியாவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளின்படி கடன் மறுசீரமைப்பை இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூர்த்தி செய்யவில்லை. அடுத்த ஆட்சிக்குவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியினர் தான் இந்தப் பிரச்சினையை முடிக்கவேண்டும். நாட்டை மீட்டெடுத்ததாக அவர் அபாண்டப் பொய் சொல்கின்றார் . ஏறத்தாழ 100 பில்லியன் டொலர்களை கட்டவேண்டிய கடனை அடுத்துவரும் அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுமையாக்கிவைத்துள்ளார். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை(15) மாலை,திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியாவில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.

அங்கு அவர்மேலும்கூறியதாவது,

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளர் என்று அடையாளப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க இருப்பார் என்று ஆரம்பத்தில் எதிர்வு கூறப்பட்டது. ஆனால்,தற்போது அவர் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார். இவர் சென்ற மூன்று ஜனாதிபதித் தேர்தலிலும் வெல்லமுடியாதென்று ஒதுங்கியவர் அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டவர். இவர் தன்னை வெற்றி வேட்பாளராக அடையாளப்படுத்திக் கொண்டு எங்களுக்கு மத்தியில் வலிந்து வந்து தேர்தல் கேட்கின்றார்.

தான் வெல்லமுடியாதென்பது தெரிந்தும் ,சஜித் பிரேமதாசவின் வெற்றியை வாக்குகளைப் பிரித்து எவ்வாறு தடுக்கலாம் என்பதற்காகவே அவர் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்கு பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கில் அதிகம் கூட்டங்களை நடத்துகிறார். தமிழரசுக் கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன எடுத்திருக்கும் தீர்மானத்தினால், ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகளைப் பிரிக்கும் விடயம் மிகவும் பின்னடைவைக் கண்டுள்ளது.

ரணில் ஜனாதிபதியாக இருந்தும் கடன் மறுசீரமைப்பை சரியாக செய்து முடிக்கவில்லை. தான் நாட்டை மீட்டதாகச் சொல்லித்திரிகின்றார்.
சர்வதேச நாணய நிதியம் சொன்ன நியதிகளின்படி கடன் மறுசீரமைப்பை இன்னும் அவர் பூர்த்தி செய்யவில்லை. பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு தனியார் பணமுறிகளை வைத்துக் கொண்டிருக்கின்ற உரிமையாளர்களுடன் உடன்படிக்கை செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

எந்தவொரு அனுபவமும் இல்லாத சாகல ரத்நாயக்கவை வைத்துக் கொண்டுதான் இதைச்செய்கிறார்.சாகல ரத்நாயக்கவால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. அடுத்து ஆட்சிக்கு வரப்போகும் நாங்கள் தான் இந்தப்பிரச்சினையை செய்து முடிக்கவேண்டும். இன்னும் கடன் மறுசீரமைப்பை ரணில் பூர்த்தி செய்யவில்லை என்பதை மிகத் தெளிவாக சொல்லவேண்டும்.

நாட்டை மீட்டெடுத்ததென்பது அபாண்டப்பொய்.ஏறத்தாழ100 பில்லியன் டொலர்களை கட்டவேண்டிய கடன் சுமையை அடுத்துவரும் அரசாங்கத்துக்கு சுமையாக்கிவைத்துள்ளார்.கடன் கட்டுவதற்கு காலஅவகாசம் எடுத்துள்ளார். ஆனால் கட்டிமுடிக்கவில்லை.

இதேவேளை,இந்தியா நான்கறை மில்லியன் டொலரை கடனாக கொடுத்துள்ளது.

தமிழரசுக்கட்சியும் சஜிதை ஆதரிப்பதாக சுமந்திரன் சொல்லியுள்ளார்.அவரின் கொள்கைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவின் கொள்கைக்குமிடையில் சில உடன்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சஜிதின் அணியில் உள்ளார்.நாங்களும் இருக்கின்றோம்.

சென்ற 2016 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை விரட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க எமது அணியில் இருப்பது நல்லது என்பதற்காகத்தான் அநுர குமார திஸாநாயக்க அன்று சகித்துக் கொண்டார்.இப்போது மட்டும் ஏன் அவரால் சகித்துக் கொள்ள முடியாமல் உள்ளது?

நான் அமைச்சராக இருந்தபோது,துறைமுக அதிகார சபையின் கீழ் பிரிமா ஆலை இருந்தபோது,இதில் கோதுமை மாவின் சந்தை விலையை குறைப்பதென்றால் போட்டிக்கு இன்னுமொரு நிறுவனத்தை கொண்டவரவேண்டியிருந்தது.அதன்போது செரண்டிப் நிறுவனம் வந்தது.அந்த நிறுவனம் வருவதைத் தடுப்பதற்காக சிகப்பு சகோதரர்களின் தொழிற்சங்கம் வழக்குப் போட்டது.இதன்பின்னர் செரண்டிப் நிறுவனத்தினிடம் பணம் பெற்றுக் கொண்டு சிகப்புச் சகோதர்கள் வழக்கை வாபஸ் பெற்றார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *