உலகினை நேர்வழிப்படுத்த உதவிய உன்னத தூதரின் போதனைகளை நினைவு கூறும் நாள்.மீலாத் செய்தியில் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இந்த மீலாதுன் நபி தினமானது உலகினை நேர்வழிப்படுத்த உதவிய நபிகளாரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு உன்னத தருணமாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் சம உரிமை மற்றும் சமத்துவத்தினை வலியுறுத்தும் உன்னதமான கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு நபரும் இனம், சாதி அல்லது நிறம் காரணமாக ஒருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர்.
வெறுப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த யுகத்தில் மனித விழுமியங்களுக்கும் மனிதநேயத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பங்களிப்பு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களைச் சுரண்டுவதை எதிர்த்ததுடன், அடிமைகளின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார்கள். தொழிலாளர்களின் வியர்வை உலர்வதற்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்று போதித்தது இதற்கு உதாரணம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இத்தினத்தில், உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பின் செய்தியை கொண்டு செல்லும் மிலாதுன் நபியின் மகத்துவம் அன்றாட வாழ்வில் நம் அனைவரையும் வழிநடத்தும் என்று நம்புகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
M.S.M. நவாஸ்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்