நபிகள் நாயகம் போதித்த அரசியல் அமைப்பை தேர்தலில் பயன்படுத்துவோம்; மீலாத் வாழ்த்துச்செய்தியில் கலீலுர்ரஹ்மான்
இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற்று வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கும் போது, இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்களும் இஸ்லாமிய மத போதகரான கண்மணி நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் நபிகளார் கற்றுத் தந்த அரசியல் ஆட்சிமுறையை சிந்தித்து நமது வாக்கு செலுத்தலை தீர்மானிக்க இந்த பெருநாளில் முடிவெடுப்போம் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொருளாதார நெருக்கடியின் போது இறைவனின் உதவியால் நாம் மீண்டோம். அதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை செய்தனர். அதற்காக நாம் முயற்சிகளை செய்தவர்களுக்கு, இறைவனுக்கும் நன்றி செலுத்துவோம், மோசடி, ஊழல், ஏமாற்று ஆகியவற்றைத் தவிர்த்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், பராமரிக்கவும், இஸ்லாமிய போதனைகளையும், நபிகளாரின் அறிவுரைகளைப் பின்பற்றவும் நாம் திடசங்கடம் பூண்டு வரவிருக்கும் தேர்தலில் நமது செயல்பாடுகளை செய்தால், அந்த உன்னத நபியின் ஆசீர்வாதத்தை சந்தேகத்திற்கு இடமின்றி பெறுவோம்.
எனவே, முஸ்லிம் சமூகத்தில் உள்ள மத, அரசியல், சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகத்தை நபிகள் நாயகத்தின் பாதையில் நடக்கச்செய்ய வழிகாட்ட வேண்டும். அவ்வாறில்லாமல் முஸ்லிம் சமூகம் தமது குறுகிய அரசியல் அதிகாரத்தையும் இலக்குகளையும் அடைவதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.