இலக்கியச் சுடர் மற்றும் தேசபந்து ஆகிய இரு விருதுகளை பெற்றார் கல்பிட்டியின் எழுத்தாளர் ரபீக் ரபிஸ் மொஹமட்
கல்பிட்டியை சேர்ந்த இலக்கியத்துறையில் ஆர்வமிக்க, பல சிறுகதைகளை எழுதிய ரபீக் ரபிஸ் மொஹமட் இன்று (16) இலக்கிய சுடர்,தேசபந்து (கலாபூஷன்) ஆகிய தேசிய கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வாழும் போதே வாழ்த்துவோம் என்ற தொணிப் பொருளில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும், சர்வதேச பௌத்த சம்மேளனமும் இணைந்து கண்ணகி கலாலயம் , ஐக்கிய சுயத்தொழில் வியாபாரிகள் சங்கம் மற்றும் எமது நாட்டின் சகல கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் தேசிய கலை அரண் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமாக 16/09/2024 (திங்கள் கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக பொது இயக்குனர் ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்னபிரிய கலந்து சிறப்பித்ததுடன், மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்கள், பௌத்த சம்மேளத்தின் தலைவர்கள், கண்ணகி கலாலயத்தின் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்பிட்டி மணல் தோட்டத்தைச் சேர்ந்த அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான கே.பி. ரபிக் மற்றும் நஸ்ரின் தம்பதிகளின் புதல்வருமான ரபிஸ் மொஹமட் இலக்கிய சுடர், தேசபந்து (கலாபூஷன்) தேசிய கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பள்ளி பருவத்தில் இருந்தே கலை மற்றும் இலக்கிய துறையில் ஆர்வமாக இருந்து சாதிக்க வேண்டும் என்று பல சவால்களை சந்தித்து கடந்து 5 வருடங்களாக தன்னை கலை துறையிலும், இலக்கிய துறையிலும் தன்னை சிறந்த எழுத்தாளராக நிரூபித்து வருகிறார். சமூக வலை தளங்களின் ஊடாகவும் இவரது திறமை உலகம் முழுவதும் சென்றுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அந்த வகையில் கடந்த வருடம் 2023ம் ஆண்டு இந்தியாவின் தமிழ் நாட்டில் அத்தியாம் 1 (யார் இவள்) என்ற நாவலை வெளியிட்டு இருந்தார். அந்த நாவல் சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது என்பது சிறப்பம்சமாகும்.
அதே போல் அத்தியாயம் 1,2 (யார் இவள்) நாவல்களும், நினைவுகள் கவிதை தொகுப்பு மற்றும் சிறுகதை தொகுப்பு என்ற புத்தகங்களை இலங்கையில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார்.
மற்றும் தனிப்பட்ட செயழி மூலமாக பிரபல்யமாக உள்ள இவர் தற்போது வரை 20க்கும் மேற்பட்ட நாவல்கள் குறுநால்கள், 300க்கு மேற்பட்ட சிறுகதைகள் 250க்கு மேற்பட்ட கவிதைகள் மற்றும் கட்டுரைகள் என்று எழுதியுள்ளதுடன், எழுதியும் வருகின்றார்.
அந்த செயழியின் ஊடாக அவரை 4000க்கு மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விருது தொடர்பில் ரேபிஸ் முஹமட் குறிப்பிடுகையில்,
“எனது பெற்றோருக்கும் எனது பெயரின் பின்னால் இந்த ஊர் பெயரை தாங்கிச் சென்று ஊருக்கும் பெருமை ஈட்டித்தந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
எனது பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் ஊர் மக்களுக்காக இந்த கௌரவ விருதை சமர்பிக்கின்றேன்.
நான் இப்போது வெளிநாட்டில் பணி புரிவதால் எனது தந்தையின் கைகளால் அந்த கௌரவ விருதை பெற்றமைக்கு பெருமைப்படுகின்றேன்.
என் தந்தையை நான் பெரிதாக பெருமைப்படுத்தியது கிடையாது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்த விருதை அவருக்கு எனது கைகளால் பெற்று அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அதற்கான சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. அதுவும் என் தந்தையே மேடை ஏறி எனக்கான கௌரவத்தை அவர் பெற்ற போது என் தந்தையை பெருமைப்படுத்திய ஒரு திருப்தியை அடைந்துக் கொண்டேன். இச்சந்தர்ப்பத்தை வழங்கிய அல்லாஹுக்கே எல்லா புகழும்.” என்றார்.
(அரபாத் பஹர்தீன்)