உள்நாடு

மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்த அண்ணலாரின் நினைவு கூறும் நாளே மீலாத் தினம்; ஜெம்மியதுல் உலமாவின் மீலாத் வாழ்த்து செய்தி

“ரபீஉன்” என்றால் வசந்தம் என்று பொருள்படும். வசந்த காலமானது பூமிக்கு அழகையும் ரம்மியத்தையும் பசுமையையும் செழிப்பையும் கொண்டுவருகிறது. அதுபோலவே ரபீஉனில் அவ்வல் மாதத்தில் பிறந்த எமது உயிரிலும் மேலான அன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மானிட சமூகத்துக்கு தூதுத்துவ ஒளி, விடிவு, வெற்றி, விடுதலை, அமைதி, சுபீட்சம் என அகிலத்தார் அனைவருக்கும் இறையருளை, சர்வதேசத் தூதை சுமந்து வந்தார்கள்.

அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு அனுப்பட்ட அத்தனை நபிமார்களும் ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு ஆகிய விடயங்களைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். இறுதி இறைத்தூதரான நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதே பணியினை மேற்கொள்வதற்காகத்தான் அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்.

இதனை பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்.” (சூரா அல்-ஜுமுஆ : 02)

“உலக மக்களுக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை.” (சூரா அல்-அன்பியா : 107)

அந்தவகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதம் பல சிறப்பம்சங்களைப் பெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீலாதுந்நபி தினம் எனப்படும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறந்த தினமானது உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய உன்னதமான ஒரு நிகழ்வுக்குரிய தினமாகும்.

அன்னார் மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள். அனைவருடனும் பாகுபாடின்றி, அன்பாகவும் பண்பாகவும் பழகினார்கள். மனித நேயம், சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்காக அன்னார் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். எப்போதும் எல்லா நிலைமைகளிலும் நீதமாக நடந்துகொண்டதோடு ஏழை எளியோரை, அநாதைகளை அரவணைத்து வாழ்ந்தார்கள். பல்லின சமூகங்களையும் உள்ளடக்கிய ‘மதீனா சாசனம்’ எனும் நீதமான யாப்பை அறிமுகம் செய்தார்கள். ஆன்மிகம், லௌகீகம் ஆகிய இரண்டிலும் ஒருசேர மகத்தான வெற்றியைப் பெற்றார்கள். எனவேதான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதராக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் அல்லாஹ் நபித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான். மறுமை வரைக்கும் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டும் பொறுப்பை அன்னாரிடம் ஒப்படைத்தான். எனவே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஏக வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். அம்மாமனிதரின் முழு வாழ்வுமே மனித குலத்திற்கான அழகிய முன்மாதிரிகளால் நிரம்பி வழிந்தன. இந்த உண்மையை அல்-குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

“அல்லாஹ்வின் தூதரில் நிச்சயம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது”. (சூரா அல்-அஹ்ஸாப்: 21)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பற்றுவைத்தல் எனும்போது குறைந்தபட்சம் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்தும் ஸலாமும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) சொல்லல், அவர்களின் பெயர் கூறும் போதும் பிறர் கூறக் கேட்கும் போதும் கண்ணியப்படுத்தி ஸலவாத் சொல்லல், அவர்களது குடும்பத்தவர்கள் (அஹ்லுல்பைத்), தூய மனைவிமார்கள் மற்றும் நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) ஆகியோர் மீதும் அன்பும் கண்ணியமும் வைத்தல், ஹதீஸ்களை கற்றுக்கொள்ளல், சுன்னாக்களை பேணுதலோடு நடைமுறைப்படுத்தல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆளுமைப் பண்புகளை புரிந்துகொள்ளவும் படித்து விளங்கவும் நேரம் ஒதுக்குதல், அறியாத மக்களுக்கு அன்னாரை அழகிய முறையில் அறிமுகம் செய்தல் மற்றும் அவர்களை தவறாகப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அப்புரிதலைக் களைந்து, சரியான புரிதலை அவர்களுக்கு வழங்கி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தல் என்பன அன்னாரின் சமூகத்தினர் என்ற வகையில் எமது கடமையும் பொறுப்புமாகும்.

அல்லாஹு தஆலா இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எல்லா விடயங்களிலும் பரிபூரணமானவர்களாக அனுப்பினான். அன்னார் ஸூரத், ஸீரத், ஸரீரத் எனும் வெளித்தோற்றம், உள்தோற்றம், வாழ்க்கை வரலாறு ஆகிய மூன்று பகுதிகளிலும் பரிபூரணமானவர்களாக திகழ்ந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் முன்மாதிரியானவர்களாக திகழ்ந்தார்கள். இறைநம்பிக்கை, வணக்க வழிபாடுகள், கொடுக்கல்வாங்கல், இல்லற வாழ்க்கை, நற்பண்புகள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை போன்ற சகல துறைகளிலும் முன்மாதிரியானவர்களாக திகழ்ந்தார்கள்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்லதொரு தந்தையாக, சிறந்ததொரு கணவனாக, வீரமிக்க தளபதியாக, எடுத்துக்காட்டான தலைவராக, முன்மாதிரியான ஆசானாக போன்ற வாழ்வில் சகல துறைகளிலும் பின்பற்றத்தக்கவர்களாக வாழ்ந்து காட்டி சென்றார்கள்.

எம் பெருமானார் அவர்கள் கொண்டுவந்த மார்க்கமும், அவர்களின் வாழ்க்கை முறைகளும், எல்லா மனிதர்களாலும் எடுத்து நடக்க இலகுவானதாகவும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானதாகும் என்பது உலகம் வியக்கும் விடயமாகும்.
அன்னார் கொண்டு வந்த இஸ்லாமியத் தூது ஈருலக வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. சாந்தியையும் சமாதானத்தையும் போதித்து நின்றது. அந்தத் தூது அநாகரிகமாக வாழ்ந்த மக்களை நாகரீகத்தின் பால் அழைத்துச் செல்லக்கூடியதாக இருந்தது.

“முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள்.” (சூரா அல்-ஹுஜ்ராத் : 02)

“(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்.” (சூரா அந்-நூர் : 63)

மேற்படி திருமறை வசனங்களின் ஊடாக அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் தமது சப்தத்தை உயர்த்திப் பேசுவதையும் அவர்களோடு அவமரியாதையாக நடந்து கொள்வதையும் அல்லாஹு தஆலா தடை செய்துள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதன்படி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தம தோழர்கள் அவர்களை தம் உயிருக்கும் மேலாக நேசித்ததோடு அவர்களிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் பண்பாட்டோடும் நடந்துகொண்டார்கள்.

எனவே, நாமும் அதேபோன்று அல்லாஹு தஆலா வழிகாட்டியதன் அடிப்படையில் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் எமது உயிரை விடவும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நேசம் வைப்போம். அவர்களது வாழ்க்கையை ஆழமாகக் கற்றுக் கொள்வதோடு, எமது பிள்ளைகளின் உள்ளங்களிலும் அவர்கள் மீதான அன்பையும் பற்றையும் விதைப்போம். அல்லாஹ் எம்மனைவரையும் இறுதிநாள் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித்தந்த வழியில் வாழச்செய்வதோடு அன்னாரோடு சுவனத்தில் ஒன்றாக வாழும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக!

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *