உள்நாடு

கள்ள வாக்கு அளித்தால் 12 மாதங்கள் சிறை ;2 இலட்சம் தண்டப்பணம்..!

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு, 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், இரண்டு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படும்” என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்படக் கூடும்” என, பல கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளன.
இதனால், வாக்குப் பெட்டிகளை வாக்குகள் எண்ணும் தேர்தல் மத்திய நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் போது, குறித்த வாகனங்களுடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்ப்பில் இருவரை மாத்திரம் தேர்தல்கள் ஆணைக் குழுவின் வாகனத்தைப் பின்தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு, கடுமையான தண்டனைகளை மேல் நீதிமன்றத்தின் ஊடாக அளிக்க முடியும்” என, ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக்க குலரத்ன தெரிவித்தார்.
“கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா தண்டப்பணத்தை விதிக்க முடியும் அல்லது 12 மாதங்கள் சிறைத் தண்டனையை விதிக்க முடியும் அல்லது இரண்டு இலட்சம் அபராதத்துடன், தண்டனையையும் வழங்க முடியும்”.
“1981 ஆம் ஆண்டு 15 இலக்கச் சட்டத்தின் பிரகாரம், 500 ரூபா தண்டப்பணமே கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டது. என்றாலும், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திருத்தத்தின் ஊடாக, இந்தத் தொகை இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.
கள்ள வாக்கு அளித்த குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு, மேற்படி தண்டனைகளை விதிப்பதுடன், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்க, வாக்காளர் பதிவேட்டில் பதியவும் தடை விதிக்கப்படும்” என்றும் சிந்தக்க குலரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.

( ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *