உள்நாடு

மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதே எனது முதல் நோக்கம்.ஹொரணை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம்

 சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைப் பாதுகாப்பதன் மூலம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம்

 சஜித்திற்கு அல்லது அநுரவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மாற்ற முடியாது: அவர்களின் பொய்களுக்கு ஏமாற வேண்டாம்

  • ஹொரணையில் ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது முதல் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று அந்த உடன்படிக்கைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், சஜித் மற்றும் அநுரவின் ஆலோசனைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் இல்லையெனவும், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கே ஆதரவு உள்ளது என்றும் தெரிவித்த ஜனாதிபதி, “IMF வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள சாதனைகளைப் பாதுகாத்து முன்னேறுவது முக்கியம்” என அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசெக் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

ஹொரணை பொது விளையாட்டரங்கில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் இல்லாமல், எங்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் காரணமாக எங்களுக்கு 18 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. மேலும், நாம் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியை செலுத்துவதில் 10 பில்லியன் டொலர்கள் நன்மையைப் பெறுகிறோம்.

இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். எங்களால் எப்போதும் கடன் வாங்க முடியாது. ஏற்றுமதி வருமானத்தை விட நமது இறக்குமதி செலவு அதிகம். எனவே, நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்க, ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். நிவாரணங்களை வழங்குவதன் மூலம் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது. எனவே, நாம் ஒன்றிணைந்து முன்னேற்றமான பொருளா தாரத்தை உருவாக்குவோம்.

மக்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்படுகிறார்கள். அந்த பிள்ளைகளுக்காக சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும். இன்று சஜித்தும் அநுரவும் அனைத்தையும் இலவசமாகத் தருவதாக கூறுகிறார்கள். அவ்வாறு வழங்குவது சாத்தியமில்லை. வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதாக கூறினாலும், இதுவரை அதுபற்றி பேசவில்லை.

இதற்கு முன்னர் ஐ.தே.க வேட்பாளராக போட்டியிட்டேன். இம்முறை சுயேட்சை வேட்பாளராக உங்கள் முன்வந்துள்ளேன்.நாடு குறித்து சிந்தித்தே சகல கட்சியினரும் இணைந்து பணியாற்றுகிறோம். ஐ.தே.கவின் வெற்றிக்காக பங்காற்றியவர்களில் நான் மட்டும் தான் எஞ்சியுள்ளேன். எனவே கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. ஐமசவில் எவருக்கும் ஐதேக பற்றிப் பேச எந்த உரிமையும் கிடையாது. சஜித்தை அரசியலுக்கு கொண்டு வந்தது நான் தான் . பிரேமாஸ அல்ல. அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கியதும் நான் தான். நாம் அனைவரும் நாட்டுக்காக ஒன்று பட்டுள்ளோம். எனவே ஐதேக ஆதரவாளர்கள் எம்முடன் இணைய வேண்டும்.

1977 களவரத்தின் போது ஜேஆர் ஜெயவர்தனவுக்கு அன்று சிரிமாவோ பண்டாநாயக்க உதவினார். இன்று நாம் அனைவரும் நாட்டுக்காவே ஒன்று பட்டுள்ளோம்.

மக்கள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாததால் தான் பொறுப்பை ஏற்றேன். சஜித்திற்கோ அநுரவிற்கோ உங்கள் கஷ்டம் தெரியவில்லை.அவர்களுக்கு மனம் இறங்கவில்லையா?

ஆனால் தற்போது இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம். அதாவது நான் தொடங்கிய திட்டத்தை தொடர வேண்டும். எனவே இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல என்னால் மட்டுமே முடியும்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவை இலங்கை மக்களே எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில், இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதை நாம் கண்டோம். இலங்கை தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது” என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சஜித்துக்கோ அல்லது அனுராவுக்கோ சர்வதேச நிதியத்தின் ஆதரவைப் பெறமாட்டார்கள். அந்த ஆதரவு எங்கள் திட்டத்திற்கு உள்ளது. எனவே இவர்களது பொய்களில் சிக்கி இரவு விழுந்த குழியில் பகல் விழப் போகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தையும், உங்கள் எதிர்காலத்தையும் காக்க, கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்:

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலையீட்டின் ஊடாக 40 வருடங்களாக களுத்தறை பிரதேசத்தில் காணப்பட்ட நன்னீரில் உப்புநீர் கலக்கும் பிரச்சினைக்கு நாம் தீர்வை வழங்கினோம். இங்கு உள்ள கிதுல் கைத்தொழிலை மேம்படுத்தவும், உப்பு நீர் காரணமாக விவசாயம் மேற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ள வயல்களில் மீண்டும் பயிரிடுவதற்கும் அவசியமான நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் போதும் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமுர்த்திக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 பில்லியன்களை, சுமார் 180 பில்லியன்களாக அதிகரித்து 24 இலட்சம் குடும்பங்களுக்கு “அஸ்வெசும“ நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தார்.

அவசர நிதித்தேவைக்கும் பயன்படாது இருந்த காணி அனுமதிப் பத்திரங்களுக்கு பதிலாக முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை “ உறுமய” வேலைத்திட்டத்தின் ஊடாக 20 இலட்சம் பேருக்கு வழங்கியவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. உண்மையில் ஏழையின் தோழன் ரணில் விக்ரமசிங்க அவர்களே. அதுபோல் பெருந்தோட்ட மக்களுக்கும் காணி உரிமை வழங்கவும், லைன் அறைகளுக்குப் பதிலாக கிராமங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

அதேபோன்று, வெளிநாடுகளில் வருடக்கணக்கில் தொழில் புரிந்து எமது நாட்டுக்கு டொலர்களை பெற்றுத்தரும் எமது நாட்டு மக்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாத காலத்தில் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவை எதிர்காலத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளார். மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் அவர் அவதானம் செலுத்தியுள்ளார். ஆகவே இவை மாத்திரமன்றி எதிர்காலத்தில் எமது நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் அவரை ஜனாதிபதியா தெரிவு செய்வோம்.

முன்னாள் அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன:

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது ஒரு சதம் ஏனும் செலவழிக்காது, நேரத்தை வீணடிக்காது, வியர்வை சிந்தாது, இலவசமாக தம்மால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்த ஜனாதிபதிப் பதவியை ஏற்காதவர்கள் இன்று நாடு பூராகவும் ஓடிக்கொண்டும், பலகோடி ரூபாக்களை செலவு செய்தும், கட்அவுட் வைத்துக்கொண்டும், போஸ்டர்களையும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டும் கஷ்டப்படுகின்றனர்.

அன்று முடியாது என்றவர்கள் இன்று பதவி வேண்டும் என்கின்றனர் . எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏச்சுப்பேச்சுகளைக் கேட்டுக்கொண்டும் துன்பங்களை தாங்கிக்கொண்டும் இந்நாட்டைப் பொறுப்பெற்று நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்துள்ளார். அதனாலே அவர்கள் இப்போது பதவியைக் கோருகின்றனர். எனவே யாரும் முடியாது என்று ஓடிய நேரம் எம்மை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 05 வருடங்களுக்கு பொறுப்பை வழங்கினால் மாத்திரமே இதனை முழுமையாக முன்னேற்ற முடியும்.

இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த:

முழு நாடும் அநுரவுக்கு அல்ல முழு நாடும் இருளுக்கு என்றே கூற வேண்டும். ஏனென்றால் மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலத்தில் செய்தவைகளை இந்த நாடு மறந்திருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். நாங்கள் மரணித்து விட்டு மீண்டும் பிறக்கவில்லை. 1971 முதல் 1988, 89 முதல் கடந்த போராட்ட காலத்தின்போதும் அவர்களின் உண்மையான நிலையை நாங்கள் கண்டுகொண்டோம்.

நீங்கள் மறந்தாலும் இந்த நாட்டின் மனச்சாட்சியுள்ள மக்கள் அனைவரும் பழைய விடயங்களை நினைவில் வைத்துள்ளனர். அன்று எவ்வாறு டிரான்ஸ்போமர்களை வெடிக்க வைத்தார்கள். விவசாய மையங்களுக்கு எவ்வாறு தீ வைத்தார்கள், அன்று எவ்வாறு இ.போ.சபைக்கு சொந்தான பஸ்களை எரித்தார்கள். அரச சொத்துக்களை எரித்து சாம்பலாக்கியது எவ்வாறு என்பது எமக்கு நினைவிருக்கிறது. எமது ஊரில் இருந்த அதிபர்களை எவ்வாறு கொலை செய்தார்கள் என்றும் எமக்குத் தெரியும்.

இராணுவ வீரர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் பிள்ளைகள் தங்களின் தந்தையைக் கொலை செய்ய வேண்டாம் என்று கதறும்போதும் தலைக்கு துப்பாக்கிச்சூடு நடத்திக் கொலை செய்த விதத்தை நாங்கள் மறக்கவில்லை. நாங்கள் மறந்து விட்டோம் என்று நினைத்தால், அது தவறு என்று அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ அலை இருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டாலும் உண்மையான அலை இருப்பது எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே. எனவே அவரின் வெற்றி இன்று உறுதியாகியுள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சர் பிரியங்கனீ அபேவீர:

வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்த இந்த நாட்டின் 50% வீதமான பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களில் தீர்வு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்யவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். இங்கு இருக்கும் யாருக்காகவும் அன்றி, ரணில் விக்ரமசிங்கவுக்காகவே தான் நான் இந்த மேடைக்கு வந்தேன்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே என்பதை இன்று எமது மக்கள் மட்டுமல்ல சர்வதேச சமூகமும் உணர்ந்துள்ளது. அவரை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்து, எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்குவதே எமது கடமையும் பொறுப்புமாகும்” என்று தெரிவித்தார்.

மகாசங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரள, லக்ஷ்மன் விஜேமான்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹொரணை அமைப்பாளர் சட்டத்தரணி துஷார குணரத்ன மற்றும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச அரசியல் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *