உள்நாடு

புலமைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு உதயத்தின் வாழ்த்துக்கள்

அன்பின் பெற்றார்களே! ஐந்தாம் ஆண்டு Scholarship பரீட்சைக்கு தயாராகி இருக்கும் எங்கள் பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க ஊக்கம் கொடுக்கும் நேரம் இது.

எனவே இந்த நேரத்தில் பெற்றோராகிய நாம் அமைதியாக செயல்படுவோம். நிதானமாக இருப்பதை அவர்களுக்கு உணர்த்துவோம். பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அழகாக, தைரியமாக பேசுவோம்.கோரிக்கைகளை தவிர்த்துக் கொள்வோம்.

நீ எப்படியோ சித்தியடைய வேண்டும் என்றோ, நீ சித்தியடைவது தான் எங்கள் எதிர்பார்ப்பு என்றோ அல்லது சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது முறையில் வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்கள் கொடுப்பது நல்லதல்ல.

நாளை பரீட்சை என்பதால் நீண்ட நேரத்தை படிப்பில் செலவிடுவதை குறைத்து பிள்ளை ஓய்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது. மனச்சோர்வை புரிந்து கொள்வோம்.

பிள்ளை மனச் சோர்வாக இருக்கக் கண்டால் அவசரப்பட்டு பொருத்தமற்ற எதனையும் சொல்லிவிடாமல்,
▪பிள்ளை செய்வது அதற்குப் போதுமானது என்பதை தெரியப்படுத்துவோம்.
▪மற்றவர்களுடன் போட்டியிடுவதற்காக நீங்கள் படிப்பதில்லை. உங்கள் திறமையை வெளிப்படுத்தவும் அதை காணவுமே படிக்கிறீர்கள் என்று எடுத்துக்கூறுவோம்.

நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்க உதவுவோம்.

உதாரணமாக…

▪நான் புத்திசாலி
▪இந்தப் பரீட்சையில் நான் சிறப்பாக செயற்படுவேன்
▪நான் படித்திருக்கிறேன்
▪எனக்கு பதில்கள் தெரியும்
▪என்னால் தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியும். என்று சொல்லுமாறு சொல்லிக்கொடுப்போம்

உங்கள் நல்ல சிந்தனையால் மட்டுமே நீங்கள் வெற்றியாளராக ஆகுவீர். அதனால்
▪என்னால் முடியும்…!
▪நான் சாதிப்பேன்..!

என்ற எண்ணங்களை மனதிற்கு கொண்டுவருமாறு எடுத்துக்கூறலாம்.

ஒப்பிடுவதை தவிர்த்துக் கொள்வோம்

பிள்ளையை மற்றப்பிள்ளையோடு ஒப்பிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வதுடன் பிள்ளைக்கும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டாம் என்பதை எடுத்துச் சொல்வோம். மற்றப்பிள்ளைகள் எப்படிச்செய்வார்கள் என்று எண்ணுவதை விட்டு, உங்கள் திறன்கள் மீது அவதானம் செலுத்துங்கள் என்றும் சொல்லிக்கொடுப்போம்.

இப்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களால் முடிந்தவரை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள் என்று ஊக்கம் கொடுப்போம்..

உறக்கமும் ஓய்வும்

இந்த நேரத்தில் பிள்ளைக்கு உறக்கமும் ஓய்வும் கட்டாயம் தேவை. பூரணமான உறக்கத்திற்கு நேரத்தை ஒதுக்கிக்கொடுப்போம். பிள்ளைக்கு 7-8 மணித்தியாலம் உறங்க அவகாசம் கொடுப்போம்.
அழகாக ஆரோக்கியமாக உறங்கினால் பரீட்சை எழுதும் போது உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இயங்கும் என்பதை இரவில் நினைவு படுத்துவோம்.

பிள்ளையின் தலை தடவி பிரார்த்தனை செய்து..நெற்றியில் ஒரு முத்தமிட்டு பரீட்சைக்கு அனுப்புவோம்.அது பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுக்கும்.

உங்கள் பிள்ளை மன உறுதியுடன் பரீட்சைக்கு முகம் கொடுக்க நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

அஸ்ஹர் அன்ஸார்  FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *