உள்நாடு

கூட்டத்தைப் பார்த்து தீர்மானிக்காதீர்கள்; மக்களிடம் கேட்கும் திலித் ஜயவீர

“செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து, யாரும் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம்” என, ‘சர்ஜவஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று (11) காலை ‘சர்வஜன அதிகார அமைப்பின்’ பல ஆசன அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட சர்வஜன அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, “மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவ்வேளையில், இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்ததைப் போன்று, எங்களுடைய செலவினங்களைக் கட்டுப்படுத்தி இயன்றளவு பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் மக்களை ஈர்ப்பதற்காக, பஸ்ஸில் மக்களை ஏற்றிச் செல்லவோ அல்லது ‘ட்ரோன்’ கேமராக்களைப் பயன்படுத்தவோ இல்லை.

கூட்டங்களுக்கு வரும் அனைவருமே அந்த வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று, யாராவது நினைப்பார்களாயின் அது முற்றிலும் தவறு. இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே, மக்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் நாடு முழுவதும் செல்கின்றனர்.

எனவேதான், நான் சொல்கிறேன். இந்தக் கூட்டத்தை வைத்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்காதீர்கள். இறுதி ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. மக்கள் வாக்குப் பெட்டிக்கு அருகே சென்று, தங்களது மனச்சாட்சிக்கு ஏற்ப, புத்திசாலித்தனமான முடிவை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *