உள்நாடு

நாடு அநுரவோடு’ தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தம்புத்தேகம

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர திசாநாயக்க

இதற்கு முன்னர் இந்த தோ்தல் மல்யுத்தம் அவர்களின் ஒரு சில குடும்பங்கள் மத்தியிலேயே நிலவியது. இன்று 2024 இல் அது ஒரு சில வளவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது. தேசிய மட்டத்திலிருந்து ஊர்கள் வரை இந்த போராட்டம் வியாபித்துள்ளது. இதுவரை காலமும் ஒரு சில குடும்பங்களே இந்த நாட்டை ஆட்சி செய்தன. ஆனாலும் நாட்டுக்கு எதையாவது செய்திருந்தால், மக்களை துன்ப துயரங்களிலிருந்து மீட்டெடுத்திருந்தால் பரவாயில்லை. பல தசாப்தங்களாக என்னை உள்ளிட்ட நீங்களும் இந்த அனர்த்தத்தை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். நாங்கள் சிறிய மனிதர்கள் என்றாலும் திடசங்கற்பம் கொண்டவர்கள். நோக்கத்தை கைவிடாத மக்கள்.

மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது.

நான் இந்த அரசியல் பயணத்தை 1988 இல் தம்புத்தேகம மத்திய மாகாண பாடசாலையில் கல்வி பயின்ற காலத்திலிருந்தே தொடங்கினேன். அந்த பயணம் தற்போது 36 வருடங்களாக தொடர்கிறது. நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ளோம். எங்கள் நண்பர்கள் எங்கள் கண்ணெதிரில் இறந்ததை கண்டிருக்கிறோம். மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது. எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. 1994 இல் இருந்து நாங்கள் மீண்டும் ஓரளவு தலைத்தூக்கத் தொடங்கினோம். வெற்றிகளை பெற்றோம். பின்னடைவுகளை சந்தித்தோம். ஒரு சிலர் எம்மை விட்டு நீங்கிச் சென்றார்கள். குறைகூறல்கள் வந்தன. பொய்யான தகவல்கள் வரத்தொடங்கின. சதி வேலைகள் இயங்கத் தொடங்கின. எனினும் இந்த முயற்சியில் எங்கேயாவது என்றாவது ஒரு நாள் வெற்றிபெறுவோம் என்கின்ற கடுமையான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த 36 வருடங்களுக்குள் நான் 24 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்.

நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல.

நாங்கள் இந்த அரசியலிலியிருந்து ஒரு சதத்தைக்கூட ஈட்டிக்கொள்ளாதவர்கள். பொதுப்பணத்தில் ஒரு சதம் கூட விரயம் செய்யாதவர்கள். நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல. நாங்களும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று பட்டம் பெறுகிறோம். தொழில் ஒன்றை புரிந்து தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்க்கைத்தரத்திற்கு அமைவாக வாழ்க்கையை நடாத்திச் செல்லக்கூடிய மனிதர்கள். இந்த மேடையில் இருக்கின்ற தோழர் வசந்த சமரசிங்கவும் அப்படித்தான். எங்களுக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள கல்வி மூலமாகவும் பாதைகள் நிலவின. அரசியல் பக்கத்திலும் பாதைகள் இருந்தன. எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து மீட்டெடுக்கும் நற்பணியை ஒரு புறம் ஒதுக்கிவைக்க எங்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. இந்த தொலைதூர கிராமங்களில் எவ்வளவோ பெருந்தொகையான மக்கள் வறுமையால் வாடுகிறார்கள்? எமது உறவினர்கள், நண்பர்கள் இந்த வறுமையில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்ட தருணங்களை நாங்கள் கண்டிருக்கிறோம். பாரிய எதிர்பார்ப்புடன் வளர்த்தெடுக்கின்ற தமது பிள்ளைக்கு முறையான கல்வியை வழங்க முடியாமல் தமது கண்ணெதிரில் நாசமாகின்ற விதத்தை கண்டு பெருமூச்சு விடவேண்டிய நிலை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஊர்களின் குடும்பங்களில் தமது பிள்ளைகளை தவிக்கவிட்டு, கணவன்மார்களை கைவிட்டு எமது தாய்மார்கள் சகோதரிகள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களாக தொழில்களுக்கு போய் இருக்கிறார்கள் அல்லவா? அவற்றில் எத்தனை குடும்பங்கள் நாசமாகியிருக்கின்றன? மத்திய கிழக்கிற்கு சென்ற எமது தாய்மார்களும் அக்காமார்களும் பலவிதமான துன்பங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். நாங்கள் அவற்றையெல்லாம் கண்டிருக்கிறோம்.

இந்த அத்தனை பேருடைய வண்டவாளங்களையும் நான் அறிவேன்

எங்களுடைய ஊர் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பிறக்கிறார்கள் ஏதாவது செய்கிறார்கள் செத்து மடிகிறார்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா தேவை? கிடையாது. எங்கள் மக்களுக்கு தமது வாழ்நாளில் மகிழ்ச்சியாக நல்ல உணவு வேளையொன்று, ஆரோக்கியமான வாழ்க்கை, பொழுதுபோக்கு, மகிழ்ச்சி தேவையில்லையா? அந்த வாழ்க்கை அந்த வர்க்கத்தை சோ்ந்தவர்களுக்கு மாத்திரம் தான் உரித்தானதா? எமது ஊரில் உள்ளவர்களுக்கு அந்த வாழ்க்கை உரித்தற்றதா? நீங்கள் இயலுமானவரை இந்த பெருநிலத்துடன் மல்லுகட்டுகிறீர்கள். விளைச்சலை விற்பனை செய்ய எவ்வளவோ கஷ்டப்படுகிறீர்கள்? எனினும் அவர்கள் மேலே இருந்துகொண்டு பொது திறைசேரியின் பணத்தை எப்படி திருடுவது? என திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்குகிறீர்கள். அவர்கள் ஒரு டீல் மூலமாக கொழும்பில் மிகவும் சொகுசான அப்பாற்மண்ட் ஒன்றை கொள்வனவு செய்கிறார்கள். ஒரு கொடுக்கல் வாங்கலில் துபாயில் இங்கிலாந்தில் அவுஸ்ரேலியாவில் வீடுகளை வாங்குகிறார்கள். அமெரிக்காவில் வீடுகளை வாங்குகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறீர்கள். உங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் நாட்டின் செல்வத்தை வாரிச்சுருட்டிக் கொள்கிறார்கள். அது தான் இந்த முறைமை. நாங்கள் சிறுபராயத்தில் இதனை அவ்வளவு ஆழமாக காணவில்லை. ஆனால் இந்த அரசியலை மாற்ற வேண்டுமென எமக்கொரு ஆசை இருந்தது. அத்தகைய அரசியலில் தொடர்ச்சியாக ஈடுபடுகையில் இவர்கள் எவ்வளவு வெட்கமில்லாத மனிதர்கள் என்பதை நாங்கள் கண்டோம். நான் 24 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கிறேன். இந்த அத்தனை பேருடைய வண்டவாளங்களையும் நான் அறிவேன். அவர்கள் எப்படி தமக்கும் தமது குடும்பத்திற்கும் வழிசமைத்துக்கொள்வது எனப்பார்ப்பார்கள். மக்களுக்கு குழிதோண்டி அவர்களின் எதிர்காலத்திற்கான பாதையை அமைத்துக் கொள்கிறார்கள். அன்று தபால் நயின்டீனில் பயணித்த அவர்கள் இன்று பாரிய மாளிகைகளை அமைத்துக் கொள்கிறார்கள். ஏழு எட்டு வாகனங்களை கொள்வனவு செய்கிறார்கள். நாங்கள் கண்கூடாகவே பார்த்திருக்கிறோம். சாரதியாக தொழில் புரிந்த ஒரு சிலர் அரசியலுக்கு வந்து கலாவெவில், கொழும்பு, நுவரெலியாவில் பாரியளவிலான காணிகளை எவ்வாறு வாங்கினார்கள் என்று எங்களுக்கு தெரியும். தேயிலை கொழுந்தை போக்குவரத்துச் செய்தவர்கள் அரசியலுக்கு வந்து எப்படி தேயிலைத்தோட்ட சொந்தக்காரர்களாக மாறினார்கள் என எங்களுக்கு தெரியும்.

இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்ற எங்களுக்கு உரிமை கிடையாதா?

ரணில் விக்கிரமசிங்க 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதாக கூறியே அதிகாரத்திற்கு வந்தார். பெப்ருவரி மாதம் 28 ஆம் திகதி மத்திய வங்கியை கொள்ளையடித்தார்கள். அதிகாரத்தை எடுத்துக்கொண்டது கொள்ளையடிப்பதற்காகத்தான். விரயம் செய்வதற்காகத்தான் அதன் பின்னர் என்ன நடந்தது? நாடு சீரழிந்தது. பிள்ளை கல்வியை இழந்தது. வைத்தியசாலைகளில் மருந்து இல்லாமல் போயிற்று. திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் பொழுதுபோக்கினை இழந்தார்கள். இவை நாங்கள் கண்கூடாக கண்டவை. எங்களுடன் நண்பர்களின் வாழ்க்கை எவ்வாறு முற்றுப்பெற்றது என்பதனை எங்கள் கண்ணெதிரில் கண்டோம். எங்களுக்கு விளங்குமாயின், எங்களால் உணரமுடியுமாயின், நாங்கள் மனிதாபிமானம் கொண்டவர்களாயின், எங்களுக்கு மனசாட்சி இருக்குமாயின் இதனை மாற்றியமைப்பதற்காக உயிரை பணயம் வைத்து போராட, அரசியல் இயக்கமொன்றின் பங்காளிகளாக எங்களுக்கு உரிமை கிடையாதா? நான் அவ்வாறு போராடுகின்ற அரசியல் இயக்கமொன்றின் பங்காளி. இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்ற எங்களுக்கு உரிமை கிடையாதா? அண்டை நாடான இந்தியா பழைய புகையிரத எஞ்சின்களை கழற்றி மின்சார புகையிரத கருத்திட்டத்தை அமுலாக்கி வருகிறது. இந்த ஆட்சியாளர்கள் போய் அந்த பழைய எஞ்சின்களை பரிசுப் பொருட்களாக சேகரித்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்தியா கைத்தொழில்களை உருவாக்கி வருகிறது. நாங்கள் தொழிற்சாலைகளை மூடிவருகிறோம்.

உலகம் முன்னேறி வருகிறது. நாங்கள் பிச்சை ஏந்திக் கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் 60 -70 தசாப்தத்தில் சிறிய கைத்தொழில் முறைமையொன்று கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அவை அனைத்தையுமே இந்த ஆட்சியாளர்கள் நாசமாக்கி விட்டார்கள். எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரத் தொடங்கினார்கள். இந்தியா கைத்தொழில்களை உருவாக்கி வருகிறது. நாங்கள் தொழிற்சாலைகளை மூடிவருகிறோம். ஒருபோதுமே எங்களுடைய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய தேவை இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. மூடிவிடுவது மாத்திரமல்ல இருக்கின்றவற்றையும் விற்றுத்தீர்க்கிறார்கள். ஒரே முயற்சி விற்றுத்தீர்ப்பதுதான். அமைக்கும்போதும் சூறையாடுகிறார்கள். விற்கும்போதும் பைக்குள் போட்டுக்கொள்கிறார்கள். வழக்குத் தீர்ப்பின் மறைவிலிருந்து கொண்டு பொஸ்பேட் படிவின் மண்ணை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியா பசளை தயாரிக்கின்றது. நாங்கள் அதனை இறக்குமதி செய்கிறோம்.

நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய நாங்கள் இடமளிக்கமாட்டோம்

மாவிலாறு அணையை மூடியவேளையில் வயல்கள் பாழடைந்தன. இழப்பீடு செலுத்த அரசாங்கம் தீர்மானித்தது. அதிகமாக இழப்பீடு பெற்றவர் எஸ்.எம். சந்திரசேன. என்னிடம் இருக்கிறது கொழும்பு திமிபிரிகஸ்யாய கொமர்ஷல் வங்கி கிளையிலிருந்து அநுராதபுரம் கிளைக்கு பணத்தை வைப்பு செய்தார். எஸ்.எம். சந்திரசேனவினதும் அவருடைய மனைவியினதும் இணைந்த கணக்கிற்கே. காசோலைகளின் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. எங்களுடைய ஊர் மக்களுடன் எங்களுக்கு உண்மையான ஈடுபாடு இருக்குமாயின், உண்மையான நேசம் இருக்குமாயின் இந்த நிலைமையை மாற்றியமைக்க நாங்கள் மல்லுக்கட்ட வேண்டாமா? தற்போது எங்களுக்கு தீர்மானகரமான வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. இந்த நாட்டுக்கு கேடு விளைவித்த, நாட்டை நாசமாக்கிய இந்த ஆட்சிக்குழுக்களை நிச்சயமாக விரட்டியடித்து மக்கள் ஆட்சியை மலரச்செய்விக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக அப்படிப்பட்ட அரசாங்கமொன்றை நிறுவுவோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்? நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். எம்மீது நேசம் வைத்திருக்கிறீர்கள். எம்முடன் ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *