கோட்டாவுடன் பக்கபலமாக இருந்தவர்கள் ரணிலுக்கு பின்னால் திரிகின்றனர் – ரிஷாட்
அரசியல் அனுபவமில்லாத கோட்டாபாய ராஜபக்சவிடம் நாட்டைக் கொடுத்ததால்தான் நாடு நாசமாகியது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து சனிக்கிழமை ஏறாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாடு இருக்கும் இக்கட்டான நிலையில் இன்னொருவரிடத்தில் இந்த நாட்டைக் கொடுத்து அதை கட்டியெழுப்ப முடியாது.
மீண்டும் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல வருடங்கள் தேவையாகவுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு அரசியல்வாதி அவர் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார்.
சஜித் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கொண்டு பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும் பல்வேறு சேவைகளைச் செய்துள்ளார். எனவே, உங்களது வாக்குகளை சீரழிக்காமல் சஜீத் பிரமதாசாவுக்கு வழங்குங்கள்.
நாட்டில் மாற்றம் தேவை என்று சிலர் நினைத்துக் கொண்டு சிவப்புக் கட்சிக்கு பின்னால் அலைந்து திரிகின்றார்கள். நாட்டில் மாற்றம் தேவை என்றுதான் சஹ்ரான் போன்ற சக்திகள் உருவாகி பல்வேறுபட்ட குழப்பங்கள் தோன்றின.
இந்த விடயத்தில் இளைஞர்கள் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுத்து இந்த நாட்டில் இன்னுமொரு கலவரத்தை, பிரச்சினையை தோற்றுவிக்க காரணமாக இருந்து விடாதீர்கள். இளைஞர் சமூகத்தை பிழையான பாதைக்கு தள்ளி இந்த சமுதாயத்துக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்து விடாதீர்கள்.
ஈஸ்டர் தாக்குதல் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு தந்துள்ள கஷ்டம் போன்று இன்னுமொரு கஷ்டம் வந்து விடாமல் சிவப்புக் கட்சிக்கு பின்னாலுள்ள சகோதரர்கள் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் அநுர பேசிய உரைகளையும் சஜித் பிரமதாச பேசிய உரைகளையும் நீங்கள் உண்ணிப்பாக கேளுங்கள். அதில் நீங்கள் தெளிவடைந்து கொள்வீர்கள்.
ஊழல்களை ஒழிப்போம், கள்வர்களைப் பிடிப்போம் என்று சொல்லும் சிவப்புக் கட்சிக் காரர்கள் ஏன் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நடக்கும் அநீதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
ஜனாதிபதியாக வந்தால்தான் கள்வர்களை பிடிப்போம் என்பது என்ன நியாயம்! கள்வர்களை பிடித்தது அவர்கள் இல்லை. ஹெகலிய ரம்புக்வெல செய்த கள்ள வேலையை சாதாரண பொதுமக்கள் போய் வழக்கு போட்டுதான் சிறையில் அடைத்துள்ளனர்.
கொரோனா ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்கள், கை உயர்த்தியவர்கள் எல்லோரும் ரணிலுக்கு வாக்களிக்க ஒன்றிணைந்திருக்கிறார்கள். கோட்டாவுக்கு பக்கபலமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து ரணிலுக்கு பின்னால் திரிகிறார்கள்.
எனவே, ரணிலுக்கும், அநுரவுக்கும் வாக்களித்து விடாதீர்கள். அங்கே இருப்பவர்கள் கள்வர்கள். அவர்களை பிடிக்காமல் பாதுகாப்பவர்கள் மற்றத் தரப்பினர்கள். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு திட்டங்களை செய்துள்ள சஜித்தை எல்லோருமாக சேர்ந்து தோக்கடிக்கப் பார்க்கிறார்கள். எனவே, அந்த சதியில் சிக்கி விடாமல் அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரமதாசாவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
(எச்.எம்.எம்.பர்ஸான் )