உள்நாடு

கிழக்கு அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவியைப் பெறுவது றவூப் ஹக்கீமுக்குப் பிடிக்காது – ஆளுநர் நஸீர் அஹமட் ஆதங்கம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமுக்குள்ள கவலை இந்த சமூகத்தைப் பற்றியதோ நாட்டுமக்களைப் பற்றியதோ அல்ல. அவருக்குள்ள பிரச்சினை கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருமே அமைச்சுப் பதவிகளைப் பெறக்கூடாது என்பதேயாகும் என வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் விசனம் வெளியிட்டார்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் றவூப் ஹக்கீம் நிற்கும் அணி படுதோல்வி அடையும் எனவும்  அவர் கூறினார்.
இடம்பெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரித்து ஏறாவூரில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அங்கு அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷர்ரப் , உட்பட இன்னும் பல அரசியல் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட், உற்பத்திறன் அமைச்சராக பஸீர் சேகுதாவூத் அமைச்சைப் பாரமெடுத்தபோது அதனைப் பொறுத்துக் கொள்ளாத றவூப் ஹக்கீம்  பஷீர் சேகுதாவூதை கட்சியிலிருந்து நீக்கி விட்டார். நான் சுற்றாடல்துறை அமைச்சராகப் பதவியேற்றபோது என்னையும் கட்சியிலிருந்து நீக்கி விட்டார். சமீபத்தில் அலிஸாஹிர் மௌலானா அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்தபோது அவரையும் கட்சியிலிருந்து நீக்கி விட்டார், ஆக இவரது பிரச்சினை இந்த முஸ்லிம் சமூகத்தைப் பற்றியதோ நாட்டைப் பற்றியதோ அல்ல. கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமைகள் அமைச்சுப் பதவிகளையும் அதிகாரங்களையும் பெறக்கூடாது என்பதேயாகும். இப்படிப்பட்ட குறுகிய நோக்கமுள்ள ஒருவர் இந்த சமூகத்தின் தலைவராக எப்படி இருக்க முடியும்? எப்படி சமூகம் சார்ந்த தீர்மானங்களை எடுக்க முடியும்? தூரநோக்கற்ற, சமூகத்தைப் பற்றிச் சிந்திக்காத, சாணக்கியமற்ற தலைவர்தான் இந்த றவூப் ஹக்கீம். சாணக்கியமற்ற தலைவன் ஹக்கீமின் தீர்மானங்களை முஸ்லிம் சமூகம் நம்பி ஏமரார்ந்து விடக் கூடாது.
அஷ்ரப் அவர்கள் மறைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக றவூப் ஹக்கீம் பொறுப்பெடுத்துக் கொண்டதிலிருந்து இன்றுவரை உள்ள காலகட்டம் வரை இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் றவூப் ஹக்கீம் ஆதரவளித்த அணி படுதோல்வியைத்தான் சந்தித்து வந்திருக்கின்றது.
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்று ஹக்கீம் பிரச்சாரம் செய்த வேளையில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெற்றார்.
2009ஆம் ஆண்டு யுத்தத்தை வென்றெடுத்து சிங்கள மக்களின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ போற்றப்படுகின்ற வேளையிலே முஸ்லிம் சமூகத்துக்கு உபத்திரவம் செய்த சரத் பொன்சேகாவை அறிமுகப்படுத்தி சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்த றவூப் ஹக்கீம் அதிலும் தோற்றார். எனவே, அவரது தலைமையின் கீழ் அவர் எடுத்த எல்லா முடிவுகளும் இந்த சமூகத்தை நிர்க்கதியாக்கியதாகத்தான் அமைந்தது என்பதை முஸ்லிம் சமூகம் வரலாற்றுப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *