Monday, August 11, 2025
Latest:
உள்நாடு

வெலிகமவில் 19ஆவது மீலாதுன்நபிப் பெருவிழா

19ஆவது மீலாதுன்நபிப் பெருவிழா 2024 பன்னாட்டு மக்கள் பக்தியுடன் சங்கமிக்க வெலிகமையில் தொடர்ந்தும் 19ஆவது வருடமாக அத்-தரீக்கத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ள நபி (ஸல்) அவர்களின் மீலாதுன்நபிப் பெருவிழா வெலிகாமம், இலக்கம் 52 ,புஹாரி மஸ்ஜித் மாவத்தை, “பைத்துல் பரகாஹ்” இல்லத்தில் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் குதுபுஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜுத், இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களின் திருப்பேரர் சங்கைக்குரிய ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு எகிப்து மற்றும் மொரோக்கோ நாட்டுக்கான அக்பரிய்யாத் தரீக்கத்தின் ஆத்மிக தலைவரும், எகிப்தின் தாறுள் ஹக்கீக்கா ஆய்வு மைய்யத்தின் நிறுவனரும் முதல்வருமான, பன்னூல் ஆசிரியர், ஷெய்ஹ் அஹ்மத் ஃபரீத் அல் மஸீதி (அல் அஸ்ஹரி) PhD, உட்பட சென்னை சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் அபூதலாயில், மௌலவி, டாக்டர் ஷெய்கு அப்துல்லாஹ் (ஜமாலி) P.hD, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமாவின் உப தலைவர் அல்லாமா மௌலவி, ஜியாவுத்தீன் பாகவி, பொதுச்செயலாளர் அஃப்ழலுல் உலமா, டாக்டர். அன்வர் பாதுஷா (உலவி) P.hD, அல் ஜாமிஆ ஷஜரதுன் தைய்யிபா பெண்கள் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலவி ஷர்ஃபுத்தீன் ஃபைஜி ஹக்கிய்யுல் காதிரி மற்றும் பிரபல கஸீதாப் பாடகர்களான அஹ்மத் ஸாலிஹ் பஹீமி, அபுல் பரக்காத் ஹக்கிய்யுல் காதிரி ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ் விழாவில், 14ஆம் திகதி மாலை 4:00 மணிமுதல் “புர்தா ஷரீப்’’ மற்றும் ‘‘ஃபரீததுன் நளரிய்யா, மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து “ரசூல் மாலை” . 15ஆம் திகதி காலை 10:00 மணிக்கு மாநபி புகழ் பாடும் “ஸுப்ஹான மௌலூத், தக்மீஸ் முஹம்மதிய்யா மஜ்லிஸ், மஃரிப் தொழுகைக்குப் பின் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் “ராத்திப் மஜ்லிஸ்”. 16ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரை பிரபல உலமாக்களின் உரைகளும் நூல் வெளியீடுகளும் இடம்பெறும்.

அத்துடன் இலங்கை அரசின் கல்வி இலாகா முன்னாள் அறபுப் பரீட்சை சபைத் தலைவரும், அகில இலங்கை உலமா போர்ட் முன்னாள் தலைவரும், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஷெய்காகத் திகழ்ந்த குத்புல் ஃபரீத் இமாம், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் (ரலி) அவர்கள் புஹாரி ஷரீஃபுக்கு அறபியில் எழுதிய விரிவுரையான “அல் இக்துத் தராரீ ஃபீ ஷரஹிஸ் ஸஹீஹி லில் இமாமில் புஹாரி பக்கம் 2” நூல் வெளியீடும், அவர்களின் இன்னுமொரு ஆத்மீக வெளிப்பாடான ‘யவானிஉ அஸ்மாருந் நிஉமாஉ’’ எனும் ஞான அகமிய நூலுக்கு எகிப்து நாட்டுக்கான அக்பரிய்யாத் தரீக்கத்தின் ஷெய்காகத் திகழும் ஷெய்ஹ் அஹ்மத் பரீத் அல் மஸீதி (அஸ்ஹரி) அவர்கள் எழுதிய விரிவுரையான ‘மிஷ்காதுல் அவ்லியா ஷரஹ் யவானிஉ அஸ்மாருந் நிஉமாஉ’ நூலும் மற்றும் சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா (ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா)அவர்கள் இயற்றிய சிறார் பாடல்கள் நூல் வெளியீடும் நடைபெறும்.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *