உள்நாடு

பாத யாத்திரீகர்களுக்கு இயற்கையைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் கழிவுக் குப்பைகளை கையாளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்..!

பாத யாத்திரீகர்கள் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாத்து இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் கழிவுக் குப்பைகளை கையாளுமாறு  மேற்கொண்ட பிரச்சாரம் வெற்றியளித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலயத் திருவிழா நிகழ்வின்போது வவுணதீவு வழியாக பாத யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பாத யாத்திரீகர்களிடம் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக மண்முனை மேற்கு வவுணதீவுப்பிரதேச இயற்கை ஆர்வலர்களான இளைஞர் அணியினர் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தலத்தின் 70ஆவது வருடாந்த திருவிழா கடந்த 30ம் திகதி ஆரம்பமாகி செப்ரெம்பெர் 8ஆம் திகதி முடிவுற்றது.

உலக வங்கி மற்றும் சைல்ட் பண்ட்  நிதி உதவியின் கீழ்  ஜனதாக்சன் மற்றும் அக்ஷன் யுனிற்றி லங்காக  நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் திண்மக் கழிவகற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வருடாந்தம் ஆயித்தியமலை சதாசகாய மாதா திருவிழாவை முன்னிட்டு இடம்பெறுகின்ற பாதயாத்திரையின் போது தெருமருங்குகளில் வீசப்படுகின்ற  பிளாஸ்டிக், பொலீதீன் கழிவுகள் காரணமாக வவுணதீவுப் பிரதேச விவசாய நிலம் மாசடைகிறது.

அதனால் அப்பிரதேசத்தின்  நிலமும் நீரும் மாசடைவதோடு கால் நடைகள், பறவைகள், ஊர்வன, நிலக்கீழ்  வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறாக இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் மிக மோசமான பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டே முறையான கழிவகற்றலை ஊக்குவக்கும் வகையில் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு குப்பைகளும் பெருமளவில் சேகரிக்கப்பட்டன.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட  பீளாஸ்டிக் பொலீதீன் கழிவுகள் மீள் உற்பத்தி நடவடிக்கைக்காக நீர்கொழும்பு மீள் உற்பத்தி மையத்திற்கு கையளிக்கட்டதாக  செயற்பாட்டார்கள் தெரிவித்தனர்.

இச்செயற்திட்டம் இற்கைச் சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாக்கும் தூர நோக்குடனான முன்மாதிரி நடவடிக்கை என்று பிரதேச வாசிகளும்  பாதயாத்திரீகர்களும் தெரிவித்தனர்.

 

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *