உள்நாடு

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்..!    -யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற “இயலும் ஶ்ரீலங்கா”பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு

வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் இன்று நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்காவெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

அத்துடன் வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”ஜனாதிபதித் தேர்தலை ந டத்த முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கவில்லை. அனைத்திற்கும் வரிசை இருந்தது. நாட்டில் ஸ்தீரத்தன்மையை பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளேன். அந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடியதாக உள்ளது. இயலும் ஶ்ரீலங்கா எண்ணக் கருவை முன்னெடுத்து வருகிறேன்.

சஜித்தும் அநுரவும் பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை. அவர்கள் இருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியுமா? கூட்டங்களில் பேச முன்னர் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இன்னும் பிரச்சினைகளும், சிரமங்களும் உள்ளன. ஆனால் எதிர்பார்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பாதூக்ககவே நான் போட்டியிடுகிறேன்.
கடந்த காலத்தில் எமது கடன் சுமை அதிகரித்திருந்தது. கடன் பெறுவதை நிறுத்தினோம். கடன் பெறுவதை நிறுத்தியதால் வரிகளை அதிகரிக்க நேரிட்டது. பண வீக்கம் அதிகரித்திருந்தது. இருவேளை சாப்பிடுவது கூட கஷ்டமாக இருந்தது.

தற்பொழுது பொருளாதரம் பலமடைந்துள்ளது. அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேருக்கு வழங்கி இருக்கிறோம். இன்னும் 5 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கப்பட வேண்டும். சம்பள உயர்வு வழங்கியுள்ளதோடு ஓய்வூதியங்களையும் அதிகரித்துள்ளோம். பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாலே அவற்றை செய்ய முடிந்தது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. மேலும், நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருகிறன. வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகமாக இருக்கிறது. அதனால் ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி வலுவடையும் போது இன்னும் சலுகைகளை வழங்கலாம். அடுத்த வருடம் மேலும் சலுகைகள் வழங்குவேன். வரியை குறைத்து, சலுகைகள் வழங்க முடியாது. 2019 இல் கோட்டாபய வரியை குறைத்தார். நாட்டின் வருமானம் குறைந்தது. 2022 இல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பெண்களுக்காக தனியான விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்துள்ளேன். அவர்களை வலுவூட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்கும் உறுமய காணி உறுதி பெற்றுக் கொடுக்கப்படும். அடுத்த வருடம் மேலும் வாழ்க்கைச் செலவை குறைப்போம். உற்பத்தி அதிகரிக்கும் போது அனைவரிடமும் வரி அறவிடப்படும். அத்தோடு தற்பொழுது வரி செலுத்துவோரின் வரிச்சுமை குறையும்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வருகிறோம். வடக்கு விவசாயத்திற்கு முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்த இருக்கிறோம். வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்க இருக்கிறோம். இப்பிரதேசத்தில் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கிறோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். இவற்றை அரசினால் தனியாக மேற்கொள்ள முடியாது.

9 மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்காக மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மக்களை அநுரகுமார அச்சுறுத்துகிறார். மாற்றத்திற்காக தெற்கு மக்கள் தயாராகியிருக்கையில் அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வாறான மனநிலை தெற்கில் ஏற்படும் என்கிறார். அவரது வெற்றியின் பங்காளர்களாக வர வேண்டும் என்கிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் பார்த்துக் கொள்வோம் என அநுர எச்சரித்தார். அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது இங்கு வந்து பொன்சேக்காவுக்கு வாக்களிக்க கோரினோம். வடக்கு மக்கள் பொன்சேக்காவுக்கு வாக்களித்தனர். தெற்கு மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். மஹிந்த ராஜபக்‌ஷ வென்றார்.உங்களை யாராவது தாக்கினார்களா. 2015 இல் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களிக்கக் கோரினோம். தென் பகுதி மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். நாம் வென்றோம். ஏதாவது நடந்ததா. 2019 இல் வடக்கு மக்கள் சஜித்திற்கு வாக்களித்தார்கள். தெற்கில் கோட்டாவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய இராணுவத்தை அழைத்து வந்தாரா. தேர்தல் முடிவுகளை மக்கள் அங்கீகரித்தனர். அநுர எப்படி மக்களை அச்சுறுத்த முடியும். வடக்கு மக்களை மட்டுமன்றி தெற்கு மக்களையும் அவர் அச்சுறுத்துகிறார். அது தான் அவர்களின் போக்கு.

அநுர வெற்றி பெற மாட்டார். முன்பு துண்டுப் பிரசுரம் பகிர்ந்தார். வடக்கு மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும். தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும். பின்னர் அவருக்கு எதிர்க்கட்சிக்கு வரலாம். அவருக்கு யாழ்ப்பாணத்திற்கு வர முடியாது போகும். நாம் முன்னர் அவர்களுக்கு அஞ்சவும் இல்லை. இப்பொழுது அஞ்சவுமில்லை. சஜித் பற்றி பேசி பயனில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை அவர் செய்திருந்தால் அநுர முன்னேறி வந்திருக்க மாட்டார். அவருக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றதாகும். எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் சுசுல் பிரேமஜயந்த:

“இன்று யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் வாழும் மக்கள் பொருளாதார நெருக்கடியின் கஷ்டங்களை அறிவர். யாழ்ப்பாண மக்களின் முக்கியமான தேவையாக கல்வியாகவே இருக்கிறது. 2022 இல் பாடசாலைகள் மூடிக்கிடந்தன. சீருடைகள் இருக்கவில்லை. ஆசிரியர் பற்றாக்குறை, அதிபர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் இருந்தன. அந்த அனைத்தையும் நிவர்த்தி செய்யப்பட்டன. காலம் தாமதிக்கப்பட்ட, பரீட்சைகள் நடத்தப்பட்டன. அடுத்த வருடத்திலிருந்து சரியான நேரத்தில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் உரிய நேரத்தில் நடத்தப்படும்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாண ஆசிரியர்கள், தொழிற்சங்கள் போரட்டங்களில் பங்கெடுக்கவில்லை. ஆனால் மற்றைய பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களில் ஆசிரியர்களைப் பயன்படுத்தி மாணவர்களின் கல்வியை பணயம் வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கை இப்போது கிடைத்துள்ளது. அதனால் எதிர்வரும் ஜனவரி 1 இலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தலை இலக்கு வைத்துச் செய்யாமல், வரவு செலவு திட்டத்தில் சம்பள உயர்வுக்கான பணம் ஒதுக்கியிருக்கிறோம். இதனால் சம்பளப் பிரச்சினைக்கு முற்றாக தீர்வு கிடைக்கும். எனவே, இனிவரும் காலங்களில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டியிருக்காது. இப்படியான ஒரு தீர்வை எந்தவொரு வேட்பாளரும் முன்வைக்கவில்லை. அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தைக் கலைப்பதாகச் சொல்கிறார். அவ்வாறு செய்தால் சம்பள அதிகரிப்பு கனவாகிவிடும். ஜனாதிபதி இந்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்து கல்வியை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்தினார்.

அடுத்த வருடத்தில் புதிதாக பயிற்றுவிக்கப்பட்ட 7,500 ஆசிரியர்களை சேவையில் அமர்த்துவோம். எனவே வேறு எந்த வேட்பாளருக்கும் இவ்வாறான திட்டங்கள் ஏனைய வேட்பாளர்களினால் செய்யப்படாது. எனவே மக்கள் வாக்குகளை விரயம் செய்யக்கூடாது.” என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா:

“நான் வீடமைப்பு மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சராக இருந்தபோது ஸ்டென்லி வீதியிலிருந்த கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கச் சென்றிருந்தேன். அன்று நடந்த குண்டுவெடிப்பின்போது குண்டு ஒன்றின் சிறிய துண்டு ஒன்று எனது தலையில் உள்ளது. அப்படியிருந்தும் இன்று இந்த இடத்தில் நடக்கும் கூட்டத்தில் உரையாற்றக் கிடைத்துள்ளமை எனக்கு உணர்வுபூர்வமான தருணமாகும்.

அன்று குண்டு வெடித்ததால் யாழ் மக்கள் மீது நான் கோவப்படவில்லை. எனது தொகுதி மக்களை போலவே யாழ். மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. சில அரசியல் தலைவர்கள் யாழ். மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயற்சித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக சிந்தித்தார். தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் வடக்கையும் தெற்கையும் சம நிலையில் பார்த்து முன்னோக்கி கொண்டுச் செல்லவே நினைத்தார்.

அதற்காகவே உறுமய திட்டத்தின் கீழ் யாழ். மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கினார். அதேபோல் நாட்டில் கடந்த இரு வருடங்களில் தட்டுப்பாடாக காணப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்.மக்களை எப்போதும் அன்பாக அரவணைப்பவர். ஆனால் தேர்தலுக்காக ஒருபோதும் பொய் சொல்லுவதில்லை.

எனவே, தெற்கிலிருக்கும் இனவாத அரசியலையும் வடக்கிலிருக்கும் இனவாத அரசியலையும் நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 30 வருட யுத்தம் எல்லா மக்களையும் பாதித்தது. இனியொரு யுத்தும் ஏற்பட இடமளிக்க கூடாது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட தலைவரால் மட்டுமே அதனை செய்ய முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான இயலுமை உள்ளதென நிரூபித்துள்ளார். எனவே, வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே சிறந்த தலைவர்.” என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்;

“இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றிருக்காவிட்டால் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியை நீடிப்பதைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை. எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்திருக்காவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியே நீடித்திருக்கும். அந்த ஆட்சி நீடித்திருந்தால் இன்றைய நிலையை விட 10 மடங்கு அதிகமான விலையில் பொருட்களை வாங்க வேண்டிய நிலைமை வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரு வருடங்களில் நம்மை எந்த வரிசைகளிலும் நிறுத்தி வைக்கவில்லை. அதேபோல் உடைந்து கிடக்கும் வீதியில் நம்மை பாதுகாப்பாக அழைத்துச் செல்லக்கூடிய ஒரு சாரதி இருக்கும்போது, அனுபவமற்ற சாரதியொருவர் புதிதாக கொண்டுவந்த பஸ்ஸில் ஏறிச் செல்ல அழைக்கும்போது, எந்த சாரதியுடன் பயணிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.” என்றார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்;

“இன்று தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது. எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால வங்குரோத்து நிலை வருவதை தடுக்க முடியாமல் போய்விடும். 2022 ஆம் ஆண்டு நாட்டு வங்குரோத்து நிலைக்குச் சென்றதால் எல்லாவிதமான அதியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு வந்தது.

இவ்வாறான கஷ்டங்களிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டு மக்களை மீட்டெடுத்தார். இன்று பலரும் அதனை மறந்துபோயுள்ளனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர ஜனாதிபதி தனியொரு நபராக போராடினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை கொண்டிருக்கிறார்.

எனவே இந்த தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே தகுதியானவர். அனுபவமற்ற தலைவரைத் தெரிவு செய்தமையினாலேயே கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சி சரிவை கண்டது. அன்று பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னோடு இருந்தபோதும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க சஜித் பிரேமதாச முன்வரவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் மக்களை மீட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இயலுமையைக் காண்பித்திருக்கிறார். ஆனால் மற்றைய வேட்பாளர்களுக்கு அந்த இயலுமையும் இல்லை நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டமும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு வழிகாட்டியவர்களே இன்று சஜித் பிரேமதாசவிற்கும் வழிகாட்டுகின்றனர். எனவே வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்.

எனவே, 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்காமல் வடக்கு மக்கள் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. வடக்கு மக்களின் காணி பிரச்சினைக்கும் அவரே தீர்வுகளை வழங்க முன்வந்தார்.” என்றார்.
இந்த மக்கள் பேரணியில் வடபகுதி மக்கள் பிரதிநிதிகள்,அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.

ஊடப் பிரிவு
Ranil 2024 – இயலும் ஸ்ரீலங்கா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *