புத்தளத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்ற மாட்டு வண்டிகளின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
புத்தளம் ரெக்லா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த பாரம்பரிய மாட்டு வண்டில் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை (06) புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெற்றது.
புத்தளத்தில் பாரம்பரியமான இந்த விளையாட்டுப் போட்டிகள் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றன.
மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள், மாட்டுரிமையாளர்கள் மற்றும் இதர வாலிபர்களை உள்ளடக்கிய ரெக்லா என்கின்ற இந்த விளையாட்டு கழகத்தினர், ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை தீர்த்து வைக்கும் நோக்கத்தில் 04 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறான போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார்கள்.
கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து தெரிவு போட்டிகள் நடைபெற்று இறுதிப்போட்டிகளே வெள்ளியன்று நடைபெற்றன.
அரை கரத்தை, ரேஸ் கரத்தை, குதிரை ஓட்டம், மாட்டு வண்டிகளின் திறந்த போட்டிகள், நிர்வாக குழுவினருக்கிடையிலான ரேஸ் கரத்தை போட்டி என்பன இடம்பெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், வெற்றிக்கிண்ணங்களும், வழங்கி வைக்கப்பட்டன.
ரேஸ் கரத்தை போட்டியில் 1 ம் இடம் இஸ்மி, 2ம் இடம் இஸ்கார், 3ம் இடம் நாசிக்.
அரை கரத்தை போட்டியில் 1ம் இடம் வாரிஸ், 2ம் இடம் ப்ரசன்னா, 3ம் இடம் ரியாஸ்.
ரேஸ் கரத்தை திறந்த போட்டி யில் 1ம் இடம் ப்ரசன்னா, 2ம் இடம் இஸ்கார், 3ம் இடம் இஸ்மி.
நிர்வாக குழுவினர்களுக்கிடையிலான ரேஸ் கரத்தை போட்டியில் 1ம் இடம் அஸ்வர்கான் 2ம் இடம் பஸால், 3ம் இடம் பர்ஸாத்.
குதிரை ஓட்டம் 1ம் இடம் நாசிக், 2ம் இடம் இஸ்கார், 3ம் இடம் அனான்.
புத்தளம் ரெக்லா விளையாட்டு கழக தலைவர் ஏ.டபில்யூ. அப்துல் வாரிஸ் தலைமையிலும், செயலாளர் எம்.யூ.எம்.வஸீம் மற்றும் உறுப்பினர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், முன்னாள் நகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதியுதீன், பர்வீன் ராஜா உள்ளிட்ட தொழில் அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ் )