உள்நாடு

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி; உலமாக்கள் விழிக்க வேண்டிய தேர்தலும் இதுவே” – திஹாரியில் ரிஷாட் தெரிவிப்பு

முஸ்லிம் இளைஞர்களை அரசியல் பாதையில் சரியாக வழிநடத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புதன்கிழமை (04) திஹாரியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“உலமா என்ற போர்வையில், சஹ்ரான் காடைக்குழு செய்த இழி செயலால், முஸ்லிம்கள் அனுபவித்தவற்றை எண்ணிப்பாருங்கள். இளைஞர்களை தவறான உணர்ச்சிப்பாதைக்குள் ஈர்க்க முனையும் அரசியல் சித்தாந்தம் முழு நாட்டுக்குமே ஆபத்தானது. இவ்வாறு இருக்கையில், முஸ்லிம் தலைமைகளை வீணாக விமர்சிக்கும் ஒரு சில உலமாக்கள் விடயத்திலும் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டியுள்ளது.

ஆயுதக் கவர்ச்சியில் அகப்பட்டு, முஸ்லிம் இளைஞர்கள் சீரழிவதையும் சமூகம் நாசமடைவதையும் தவிர்ப்பதற்காகவே, பெருந்தலைவர் அஷ்ரப் தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார். சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திலோ அல்லது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்திலோ முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்கவில்லை. இதனால், நமது சமூகம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், தன்னைத் தானே உலமாவென சுயமகுடம் சூட்டிய சஹ்ரானின் செயற்பாடு, முழு முஸ்லிம்களையுமே சீரழித்தது.

ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் இஸ்லாத்தை அடிப்படைவாத மார்க்கமாகவும் சித்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின் கூலிப்படைகள் எடுத்த இந்த முயற்சிகளை அடியோடு எதிர்த்தோம். இதனால், என்னைச் சிறையில் அடைத்தனர். எனது குடும்பத்தையே பழிவாங்கி வெஞ்சம் தீர்த்தனர்.

கொரொனா ஜனாஸாக்களை எரித்தபோதும் நாங்களே கொதித்தெழுந்தோம். அரபு நாடுகளோ, முஸ்லிம் ஆட்சியாளர்களோ எதையும் பேசவில்லை. அமைச்சர் அலிசப்ரியோ, தொலைபேசியை “ஓப்f” செய்துவிட்டு ஒளித்துவிட்டார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் நாங்களே மீள்குடியேற்றினோம். கண்டி, திகனை, அழுத்கமை மற்றும் அம்பாறை பற்றி எரிந்த வேளையில் களத்தில் நின்று காரியமாற்றியதுடன், நெருப்பை அணைத்ததும் நாங்களே! இவற்றை மறைத்துவிட்டு, நாங்கள் எதையும் செய்யவில்லை எனச் சிலர் கூறுகின்றனர்.

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்துவதை நிறுத்துங்கள். சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் சகல சமூகங்களுக்கும் நன்மைகிட்டும். ரவூப் ஹக்கீம், மரிக்கார், முஜிபுர்ரஹ்மான், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கபீர்ஹாஸிம், மனோகணேசன், ராதாகிருஷ்ணன், திகாம்பரம் மற்றும் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட சகலரும் எம்மிடமே உள்ளனர்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *