ரபீஉல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்க பேருவளை பகுதியில் பல்வேறு நிகழ்வுகள்
இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் பேருவளை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு மாத காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தக்கியாக்கள், அரபுக்கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் அல்குர்ஆன் மத்ரஸாக்களில் மீலாத் மார்க்கச் சொற்பொழிவு, ஸுப்ஹான மெளலூத் மஜ்லிஸ், ஸலவாத் மஜ்லிஸ், சன்மார்க்க அறிவுப்போட்டிகள் இடம் பெறுவதோடு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இம் முறையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீலாத் விழாவினை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெற்ற மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியா அதனை அண்டிய வீதிகள் மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த தக்கியாவில் 12 நாட்கள் ஸுப்ஹான மெளலூத் மஜ்லிஸ் சங்கைக்குரிய நாயகம் அல் ஆலிமுல் பாழில் வஷ்செய்ஹு காமில் அஹம்மத் பின் முஹம்மத் ஆலிம் தலைமையில் நடைபெறுகிறது.
வரலாற்று பிரசித்தி பெற்ற கெச்சி மலை தர்காவிழும் 12 நாட்கள் புனித மௌலித் நிகழ்வு நடைபெறுகிறது. சங்கைக்குரிய அஸ்ஷெயிக் மௌளவி சக்கி அஹம்மத் ஆலிம் (அஷ்ரபி) அஷ்ஷெயிக் காலிப் அளவி ஆலிம் ஹாஜியார் இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து வருகிறார்.
இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான வரலாற்றுப் புகழ்மிகு மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல், சீனங்கோட்டை ஸாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடம் உட்பட பல இடங்களில் 12 நாட்கள் ஸுப்ஹான மெளலித் மஜ்லிஸ் இடம்பெறுகிறது.
தர்கா நகர் மஜ்லிஸ் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள 12 பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஸாவியாக்களில் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி தினமும் இரவு இஷா தொழுகையின் பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனங்கோட்டையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஸாவியாக்களில் ஸுப்ஹான மெளலூத் மற்றும் கந்தூரி வைபவங்களும் இடம்பெறவுள்ளன. ரபியுல் அவ்வல் 12ம் நாள் ஸுப்ஹான மெளலூத் தமாம் மஜ்லிஸ் பல பகுதிகளில் இடம் பெறவுள்ளமையும் விஷேட அம்சமாகும். பேருவளை மருதானை பகுதியில் 16 ம் திகதி மீலாத் ஊர்வலமும் இடம்பெறும்.
எதிர்வரும் 16ம் திகதி நடைபெறும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வுகளில் தென்னிந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், உள்ளூர் மார்க்க அறிஞர்களும் உரையாற்றவுள்ளனர்.
(பேருவளை பீ. எம் முக்தார்)