புதிய முக மூடிகளுடன் சிகப்பு சகோதரர்கள்..! – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம்
சிகப்புச் சகோதர்களைப்பற்றிப் பேசுகின்றார்கள். அவர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து சிந்திக்க வேண்டும். அவர்கள் தற்போது புதிய முக மூடிகளுடன் பிசன்னமாகியுள்ளார்கள். இவர்கள் நாட்டிலுள்ள ஊழலை ஒழிக்கப்போவதாகவும் கூறுகின்றார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புத்தளத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மைத்திரி – ரணில் நல்லாட்சி -யஹப்பாலன அரசின்போது ஜனாதிபதி மைத்திரி சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதமர் பதவியை கொடுத்த நேரம் 52நாள் போராட்டக் காலத்தில் முழுநாடும் ஸ்தம்பிதம் அடைந்தது. இதன்போது எங்கள் அமைச்சரவை, எங்கள் ஜனாதிபதி என்றிருக்கும்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார். இதேவேளை அலரி மாளிகையில் கூடும்போது ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு பக்கமும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பில்லாதவர் என்று அதன்பின்னர்தான் தெரிந்து கொண்டோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காணவேண்டியதன் அவசியத்தை அவரின் முன்னிலையில் உணர்த்தி தலைமையை மாற்றியமைக்குமாறு முதலில் கூறியது நானே.
இதேவேளை அன்று நாம் தெரிவு செய்த தலைவர் சஜித் பிரேமதாச நாட்டை பொறுப்பேற்கும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்க ஒரு சவாலே இல்லை .
விசேடமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் மூன்று பேர் இணைந்து நீதிமன்றத்தில் வீசா மோசடி தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்தோம். வீசா வழங்குவது தொடர்பாக நாட்டுக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணிகளிடமிருந்தும் சேவைக் கட்டணமாக 25 டொலர் வீதம் டொலர் பில்லியன் 2400 பெறும் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. வழக்கு தொடர்ததால் வழக்கு முடியும்வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது மத்திய வங்கி மோசடியை விட, நூறு மடங்கிற்கு அதிகமான மோசடியாகும் .
புத்தளம் பிரதேசத்தின் பிரச்சினைகள் சம்பந்தமாக நான் பேசுவதற்கு முன்பு அண்மையில் எம்மைவிட்டுப்பிரிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக இருந்து இந்த ஊரின் அரசியலில் புரட்சிகரமான ஆளுமையான இருந்த யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான புத்தளத்தில் வாழ்ந்த சகோதரர் ஐ.எம்.இல்யாஸையும் இன்னுமோர் ஆளுமையான முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸையும். இந்தமேடையில் ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியான கே.ஏ.பாயிஸ் புத்தளம் மண்ணுக்கு செய்த புரட்சிகரமான சேவைகள்இஅவருடைய வித்தியாசமான ஆளுமை என்பன சிலாகித்துக் கூறத் தக்கவை.
விகிதாசார தேர்தல் வந்த நாளிலிருந்து புத்தளம் மாவட்டத்துக்கென்று எங்களுடைய சமூகத்திலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கத்தக்கு ஒரு நிரந்தர தீர்வாக நாங்கள் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலைக்கு புத்தளம் சமூகமே வந்திருந்த சூழ்நிலையில் அந்த விருப்பத்துக்கு இடம் கொடுக்கவேண்டிய காரணத்தினால் எமது கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் இணைந்து எடுத்த முடிவில் தற்போதைய எம்.பிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. அதை அவர் மறக்க முடியாது. அவ்வாறான அதிர்ஷ்டத்தை அவர் பயன்படுத்திய விதம் எவ்வளவு தவறானது என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரைத் தெரிவு செய்தது இன்றுள்ள சூழலில் எவ்வளவு பிழையானது என்பது அவருக்கும் தெரியாத விடயமல்ல.
அண்மையில் இங்கு நடைபெற்ற ரணிலின் கூட்டத்தைப் பார்த்தால்,புத்தளம் மக்களின் ஆதரவு அவருக்கு இல்லை என்பது புரியும்..இங்கு அவரைப்பற்றி பேசுவதில் பயனில்லை.
புத்தளம் வைத்தியசாலையைத் தரம் உயர்த்தி அதை மாவட்ட பொது வைத்தியசாலையாக மத்திய அரசின் கீழ் கொண்டவரும் பணியை எங்களது சஜித் பிரேமதாசவின் அரசு செய்து தரும் என்பதை இவ்விடத்தில் அறுதியிட்டுக் கூறுகின்றேன்.
இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கம் என்னைச் சந்தித்து மகஜரொன்றை தந்த சந்தர்ப்பத்தில் அதனை பாராளுமன்றத்திலும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரேரணையாகச் சமர்ப்பித்துள்ளேன்.
உப்பளம் இங்கு அநேகரின் வாழ்வாதாரமாக உள்ளது.
எங்களது ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் ஒத்துழைப்புடன் புத்தளத்தின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்போமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.