சுதேச வைத்தியதுறையின் சுவர்ண மயமான யுகத்திற்காக புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நீண்ட கால வரலாற்றை கொண்ட எமது நாட்டின் சுதேச வைத்தியத்துறையை முறைப்படுத்த வேண்டும். சித்த, யுனானி, ஆயுர்வேத, மற்றும் ஹோமியோபதி போன்ற வைத்திய துறைகள் அரச தலையீடுகள் இல்லாமையினால் இன்று ஒழுங்கற்று காணப்படுகின்றன. ஆயுர்வேத உள்ளிட்ட பாரம்பரிய வைத்தியத்துறைக்கான சட்ட திட்டங்கள் புதுப்பிக்கப்படவில்லை. எனவே ஐக்கிய மக்கள் சக்தி தற்காலத்திற்கு பொருத்தமான விதத்தில் இந்த சட்ட திட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சேவை வழங்குதல், ஒழுங்குபடுத்தல், தனியார் சுதேச வைத்திய நிலையங்களை ஒழுங்குபடுத்தல், சுதேச வைத்திய கல்வியை வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் ஆகிய துறைகள் உள்ளடங்கும் விதத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுதேச வைத்தியத்துறை தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் சாசனத்தை வெளியிடும் நிகழ்வில் நேற்று(05) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரம்பரிய வைத்தியம் தொடர்பான தேசிய கொள்கை திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கை திட்டம் நாட்டின் சட்டமாக்கப்பட வேண்டும். இந்தத் துறையை பாதுகாக்கின்ற தரப்பினராக ஏதாவது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து, அனைவரும் ஒன்றாக இணைய முடியுமான ஒருமித்த கருத்தோடு சுதேச வைத்திய துறையை பாதுகாத்து மேம்படுத்துவதோடு, மூலிகை மருத்துவத்தின் சுவர்ண மயமான யுகத்தையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.
மேலும் சுதேச வைத்திய துறையை தேசிய சுகாதார கொள்கை கொள்கை திட்டத்தின் ஊடாக திறன்பட பயன்படுத்துதல், பாரம்பரிய வைத்தியத்தை பாதுகாத்தல், சுதேச வைத்தியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குதல், ஆயுர்வேத துறை உட்பட்ட சுகாதார நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மூலிகை தோட்டங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் மூலிகை வைத்திய கிராமங்களை உருவாக்குதல் என்பனவும் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பாரம்பரிய வைத்தியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல், சுகாதாரத் துறையை மையமாகக் கொண்டு அந்நிய செலாவணியை ஈட்டுகின்ற வகையிலான சுற்றுலாத்துறை வரைக்கும் இந்த துறையை விருத்தி அடையச் செய்தல், இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் கௌரவமான இடம் ஒன்றை பெற்றுக் கொடுத்தல், வைத்தியர்களின் சேவைக்கான பெருமதியை சேர்த்தல், போன்ற வேலைத்திட்டங்களோடு நலன்புரி விடயங்களையும் வலுப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சுதேச வைத்திய துறையை புத்தாக்க தொழிலாக அபிவிருத்தி செய்வோம். இது காலத்திற்கு பொருத்தமானதாகும். அழிந்து செல்கின்ற இந்த தொழில்துறையை பாதுகாக்க வேண்டும். மூலிகை மருத்துவமானது நாட்டின் மரபாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதன் பாதுகாப்பை வார்த்தைகளால் மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை செயல்படுத்துகின்ற யுகத்துக்குள் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுகள் வாயால் வற்றாலை நடுவதைப் போல் அல்லாமல் முறையாக செயல்படுத்தப்பட்டு அவதானிக்கப்படும். வங்கரோத்து அடைந்து நிதி பற்றாக்குறையாக காணப்படுகின்ற இந்த நாட்டில் மூலிகை மருத்துவத்தை கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். அதனை முன்னெடுப்பதற்கு சரியான நோக்கும் சரியான திட்டமும் அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.