உள்நாடு

ஓட்டமாவடி அமீர் அலி அரங்கை பாவிப்பதற்கு முற்றாகத்தடை

ஓட்டமாவடி முஹைதீன் அப்துல் காதர் பொது மைதானத்தில் அமைந்துள்ள அமீர் அலி அரங்கை பாவிப்பதற்கு முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான எச்சரிக்கை பதாதை குறித்த கட்டடத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

சேதமடைந்து காணப்படும் குறித்த அரங்கினை ஆய்வு செய்யும் நோக்கில் நேற்று மாலை (04/09/2024) களவிஜயம் மேற்கொண்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் தலைமையிலான குழுவினர் மைதானத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டதுடன், சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் காணப்படும் அரங்கு தொடர்பிலும் கவனஞ்செலுத்தியிருந்தனர்.

குறித்த அரங்கின் தரம், தன்மை போன்றன தொடர்பிலான அறிக்கையைப்பெறும் நோக்கில் கட்டடத்தின் பகுதிகள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை குறித்த கட்டடத்தை எந்தவிதத் தேவைக்கும் பயன்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மைதானத்தைப்பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான வீரர்கள், பார்வையாளர்கள் குறித்த அரங்கைப் பயன்படுத்தி வருவதுடன், இவ்வாறு சேதமடைந்து காணப்படும் நிலையில் அதிகமானோர் அரங்கில் அமரும் பட்சத்தில் உயிராபத்துக்களையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரதேச விளையாட்டுக்கழங்களை வலுப்படுத்தி விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் ஆகியோர் தலைமையில் பிரதேச விளையாட்டுக்கழகங்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் போது கழகங்கள் மற்றும் வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பொது மைதானத்தைப் பயன்படுத்துவதிலுள்ள சிக்கல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இக்கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த கள ஆய்வு விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபைச்செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், பிரதேச சபை பிரதம இலிகிதர் எஸ்.எம்.நெளபர், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ஐ.எம்.அலி மற்றும் விளையாட்டுக்கழக நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த அறிவிப்பை கவனத்திற்கொள்ளுமாறு விளையாடுக்கழகங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *