தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (05) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது.
தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
நேற்று தபால் மூல வாக்களிப்பு காலை 8.30 இற்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தன.
இன்று (05) மற்றும் நாளை (06) முப்படைகளின் பணியாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 1500 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நாளை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்காளர்கள் உரிய திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 712,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் 76,977 தபால்மூல வாக்காளர்கள் அதிகூடிய வாக்காளர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.