கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கை ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில் விமர்சையாக இடம்பெற்ற புனித “ஸுப்ஹான மௌலிதுன் நபி” மஜ்லிஸ்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக, கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில், வருடாந்தம் இடம்பெற்று வரும் புனித “ஸுப்ஹான மௌலிதுன் நபி” மஜ்லிஸ் வைபவம், நேற்று (04) புதன்கிழமை (ரபீ உனில் அவ்வல் – பிறை 01) மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம்மௌலிதுன் நபி மஜ்லிஸ், எதிர்வரும் (15) ஞாயிற்றுக்கிழமை (ரபீ உனில் அவ்வல் – பிறை 12) வரை, 12 நாட்கள் மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஓதப்பட்டு தமாம் செய்யப்படும்.
மௌலவி ஐ.ஏ. காதிர் கான் (தீனி), அல் ஹாஃபிழ் அல் ஆலிம் ஏ.எச்.எம். ஸஜ்ஜாத் ஹுஸைன் (கௌஸி), மௌலவி எம்.எம். இன்ஜாஸ் (அல் பாஸி) ஆகியோர் முன்னிலைப்படுத்தி நடாத்திய இம்மௌலிதுன் நபி மஜ்லிஸில், தக்கியா நிர்வாகிகள் மற்றும் இப்பிரதேச வாழ் மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை, தினமும், மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து “ஸுப்ஹான மௌலித், இஷா தொழுகையைத் தொடர்ந்து “யா நபீ பைத்”, ” வாங்கள் ரஸூல் பைத்” மற்றும் விசேட துஆ என்பன நடைபெறும் என, தக்கியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் வைபவத்தை, உலகளாவிய முஸ்லிம்கள், எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ.ஏ. காதிர் கான் )