தலைவர் ஒருவருக்கு எந்த அணியுடனும் இணைந்து பணியாற்றும் வல்லமை இருக்க வேண்டும்.மத்துகம கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க..!
தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும் சஜித் ஒரு பொறுப்பற்ற நபர் என்பது உறுதியாகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடு இன்னல்களுக்கு முகம் கொடுத்த போது நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைந்த குழுவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு வந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படும் அணியுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் வலியுறுத்தினார்.
எதிர்கட்சித் தலைவராக சஜித் செய்தது அநுரகுமாரவை பலப்படுத்தியது எனவும் அதனால் தான் மக்கள் தற்போது ஐ.ம.சக்தி AKD யின் ஆக்சிஜன் என அழைக்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஜனாதிபதியை மிகவும் அன்புடன் வரவேற்றனர்.
இதன்போது ‘ஐந்து அம்ச’ இளைஞர் பிரேரணை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.
தருஷி அனுத்தரா எதிரிமான்னவினால் ஜனாதிபதிக்காக இயற்றப்பட்ட பாடல் ஒன்றும் இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளூ பிரிண்ட் கொள்கை அறிக்கையில் ‘பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பிலான பிரேரணை குறித்தும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதுகாப்புச் செலவினங்களைக் குறைத்தல் என்பதன் மூலம் என்ன கருதப்படுகின்றது என்பதன் உண்மைகளை அவர்கள் உடனடியாக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இரண்டு வருடங்களுக்கு முன்பு தேர்தலை நடத்தும் நிலை இருக்கவில்லை. பொருளாதாரத்தை நிலைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அதனை செய்து காட்டினோம். இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையான தன்மையை பாதுகாக்கவே தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைக் கோருகிறோம்.
நாட்டை மீட்டெடுத்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல இன்னும் இரண்டும் மூன்று வருடங்கள் தேவைப்படும். நான் ஏற்றுக்கொண்டபோது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி சரிவடைந்திருந்தது. மறுமுனையில் ரூபாயின் பெறுமதியும் கடுமையாக சரிந்தது. பணவீக்கம் தலையெடுத்தது. வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. உரம் இருக்கவும் இல்லை. எதிர்பார்ப்புக்கள் அற்றுப்போன தருணத்திலேயே அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க என்னால் முடிந்தது.
உற்பத்தி, தொழில், சுற்றுலா, வைத்திய, அரச துறைகள் என அனைத்தும் இன்று சுமூகமாக செயற்படுகின்றன. நான் தனியொரு எம்.பியாகவே நாட்டை ஏற்றேன். எனக்கு பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் ஆதரவளித்தனர். மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இன்னும் சில ஆண்டுகள் வேண்டும். எனது எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிட்டது. ஜனாதிபதி பதவியையும் பார்த்துவிட்டேன்.
அதனால் இனி உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானியுங்கள். நாம் தொடர்ந்தும் இறக்குமதிப் பொருளாதாரத்தின் மீது தங்கியிருக்க முடியாது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனை செய்யாவிட்டால் நாம் மீண்டும் நெருக்கடிக்குள் விழுவோம். நாம் முன்னோக்கிச் செல்ல பொருளாதார மாற்றமொன்று அவசியம்.
அதற்காகவே இயலும் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு முன்வைத்துள்ளேன். இன்று பல பொருட்கள் விலை குறைந்துள்ளன. அடுத்த சில வருடங்களில் மக்களின் சுமைகளை முற்றாக குறைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
எனவே ரூபாயின் பெறுமதியை பலப்படுத்தி அதனைச் செய்வோம். சிலர் வரியைக் குறைப்பதாகச் சொல்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வரிக் குறைப்புச் செய்ததாலேயே அவரின் ஆட்சி சரிவைக் கண்டது.
அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்பதாலேயே நாம் கடன் வாங்குவதையும், பணம் அச்சிடுவதையும் நிறுத்தியுள்ளோம். கதிர்காமத் திருவிழாவில் நெருப்புக்கு மத்தியில் நடப்பதைப் போன்று எமது நிலை உள்ளது. அந்தப் பயணத்தை ஓரளவு கடந்துவிட்டோம். இனிவரும் காலங்களில் உற்பத்தியை அதிகப்படுத்தி, தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதேபோல் வரிச் சுமையை குறைத்து, நிவாரணத் திட்டங்களையும் பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்தால் வரிச் சுமையைக் குறைக்க முடியும். எவ்வாறாயினும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்வது மிக முக்கியமானதாகும். மத்துகம போன்ற பகுதிகளில் ஏற்றுமதியை இலக்கு வைத்து உலக உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
முதற்கட்டமாக உலர் வலயங்களில் நெல் விளைச்சலை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அதனால் புதிய தொழில்களும், வருமான வழிகளும் உருவாகும். மறுமுனையில் இன்று பங்குச் சந்தையும் வலுவாகச் செயற்படுகிறது. பரிமாற்ற அடிப்படையில் செயற்படுத்தக்கூடிய நவீன விவசாயச் சந்தை முறைமைகளை அறிமுகப்படுத்துவோம்.
மத்துகம போன்ற பகுதிகளில் கறுவா உற்பத்தியைப் பலப்படுத்தலாம். முந்தைய காலத்தில் இறப்பர் உற்பத்தியும் இங்கு காணப்பட்டது. அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 400 டொலர் ஈட்டும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மத்துகமவில் சுற்றுலா மையம் ஒன்றை அமைப்பதோடு, முதலீட்டு வலயம் ஒன்றையும் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான பொறிமுறை இயலும் ஸ்ரீலங்கா விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்துகம இளையோர் என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவேன். இங்கு கல்வி அபிவிருத்தியை மேம்படுத்துவோம். தொழில்கல்வி மையம் ஒன்றை அமைத்து தருவோம். கடந்த நான்கு வருடங்களில் தொழில் வழங்க முடியாமல் போனதால் அடுத்த வருடம் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் பயிற்சிகளையும் தொழில்களையும் பெற்றுத் தருவோம்.
அதேபோல் உறுமய திட்டமும் உங்களுக்கு உரிமைகளைத் தருவதற்காவே உருவாக்கப்பட்டது. மேலும் இதுவரையில் நாட்டை ஆண்ட ஜனாதிபதிகள் எவரும் தனக்கு மற்றையவர்கள் உதவி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படவில்லை. ஜனாதிபதி என்பவர் தனியாக செயலாற்றும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.
சஜித்துக்கு நன்றாக ஆங்கிலம் பேச தெரிகிறது. வில்லியம் சேக்ஸ்பியரும் அவரின் ஆங்கில வகுப்புகளுக்கு வருகிறார் என்று அறிந்தேன். இவ்வாறான வேடிக்கைகளை விடுத்து ஜனாதிபதியுடன் இருக்கும் அணியில் யார் இருக்கிறார் என்பதை பார்க்காமல் ஜனாதிபதியாக சிறந்தவர் எனில் அவருக்கு வாக்களியுங்கள்.
பாராளுமன்ற தேர்தலில் பிரதமரையும் அவரோடு வரப்போகும் அணியையும் தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும். இம்முறை எனக்கு ஆதரவளித்த அணியினர் நன்றாக பணிகளை செய்தனர். அதனை மறுக்க முடியாது. அவர்கள் எவரையும் நான் தெரிவு செய்யவில்லை. எந்தவொரு அணியைத் தந்தாலும் அவர்களுடன் பணியாற்றும் இயலுமை எனக்கு உள்ளது.
தலைவர் என்றால் எந்த அணியுடனும் வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். இன்று ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரண்டு பொருளாதார குழுக்கள் இருக்கின்றன. ஒரு குழுவில் ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹசீம், எரான் விக்ரமரத்ன போன்ற எம்.பிக்கள் உள்ளனர். மற்றைய அணியில் நாலக கொடஹேவாவும், ஜீ.எல். பீரிஸூம் உள்ளனர். ஒரு குழுவின் பொருளாதார திட்டங்களில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் மறு குழுவின் திட்டங்களில் நிராகரிக்கப்படுகின்றன. அதனால் இந்த இரு குழுக்களுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதே தெரிகிறது.
அதனால் சஜித் அணியினர் இரண்டு பொருளாதார முறைமைகள் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டனர். அவை இரண்டும் பூட்டான் போன்ற வறிய நாடுகளில் பின்பற்றப்படும் கொள்கையாகும். அந்த நாடுகளின் நிலைக்கு இலங்கை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், சில இடங்களில் சுற்றுலா அபிவிருத்தி, பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைப்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் எவ்வித தௌிவுபடுத்தல்களும் இல்லை.
மேலும், இதுவரையான ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டு தலைவர்களே போட்டியிட்டனர். ஆனால் இன்று தனக்கு பின்னால் இருந்த ஜே.வி.பி மேலெழுந்து வருவதற்கான வழியை சஜித் உருவாக்கியுள்ளார். அதனால் இன்று சஜித் அனுரவை வெல்ல முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியை இன்று நானே பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். சஜித்துக்கு அளிக்கும் வாக்குகள் ஜே.வி.பிக்கு வழங்கப்படும் ஒட்சிசன் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால் செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இல்லை, தொழில் வாய்ப்பும் பிறக்காது” என்றார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்தவினால் இளைஞர்களின் கோரிக்கை தொடர்பிலான ஆவணமொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன;
“இலங்கை கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடியை யுத்த காலத்தில்கூடக் கண்டிருக்கவில்லை. அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தபோது எதிர்க்கட்சி தலைவர்கள் அதற்கும் ஆதரவளிக்கவில்லை.
ஆனாலும் நெருக்கடிகளைத் தீர்த்து சுமூகமான நிலையை ஏற்படுத்தும் இயலுமையும் அனுபவமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்தது. அதனாலேயே அவரிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க நாங்கள் தீர்மானித்திருந்தோம்.
பொருளாதார பிரச்சினைகளால் நாடு சூழப்பட்டு கிடந்ததோடு, நாட்டுக்கு ஒரு தலைமைத்தும் இன்றித் தவித்தோம். சரியான அனுபவமும் தெரிவும் உள்ளவர்களின் கைகளிலேயே நாட்டின் அரசாட்சி பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான்;
“மத்துகம நகரில் முதல் முறையாக தமிழ்ப் பாடசாலை ஒன்றை அமைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. சம்பளப் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதி அளித்திருக்கிறார். மக்களை சரியாக வழிநடத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
நாட்டில் கேஸ், மின்சாரம், மருந்து இல்லாத வேளையில் அனுரவும் இருக்கவில்லை, சஜித்தும் இருக்கவில்லை. நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே மக்களை மீட்க வந்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கான ரூ.1700 சம்பளம் கட்டாயமாகப் பெற்றுத்தரப்படும்” என்றும் உறுதியளித்தார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார;
“இலங்கையை மீட்டமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய மருந்துகள் கசப்பாக இருந்தன. ஆனால் அதனால் நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. மக்கள் கஷ்டப்படும்போது மக்களைக் காக்க வராத தலைவர்களுக்கு இன்று எங்கிருந்து தேர்தலுக்குப் பணம் வந்தது?
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இதேபோல் ஜே.வி.பியின் பெயர் பெருமளவில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அனுரகுமாரவுக்கு 3 சதவீத வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தது. இம்முறையும் ஜே.வி.பி அவ்வாறான நிலைக்கே முகம்கொடுக்கப் போகிறது” என்றார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன;
“நாட்டின் பொருளாதார நெருக்கடியின்போது எதிர்க்கட்சித் தலைவரிடம் நாட்டை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டபோது பயங்கரமான நிலையிலிருக்கும் நாட்டில் நாம் கைவைக்கப் போவதில்லை என்றனர். பின்னர் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் அரச அதிகாரத்தை ஏற்கத் தயாராக இருக்கவில்லை.
இறுதி முடிவாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். அந்த நெருக்கடியான நேரத்திலும் ஜனாதிபதி மக்களுக்கு உண்மையைச் சொன்னார். நாட்டை மீட்டெடுத்த பின்பே இன்று ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார். உலகில் ஒருபோதும் வங்குரோத்தான ஒன்றரை வருடத்தில் நாடொன்று மீட்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. எனவே ஜனாதிபதி ரணிலின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டும்.
புற்றுநோய்க்கு மருந்து வழங்கப்படும்போது தாங்க முடியாத கஷ்டங்கள் இருக்கும். ஆனால் வாழ்க்கை காப்பாற்றப்படும். அவ்வாறுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வங்குரோத்தான இலங்கைக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்தார். எனவே கிரீஸ் போன்ற நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு மக்கள் செயற்பட வேண்டும்” என்றார்.
ஊடகப்பிரிவு
Ranil 24 – இயலும் ஸ்ரீலங்கா