சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து கட்டமைத்த பொருளாதாரத்தை காப்பாற்றுங்கள்; யாபஹுவ கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க
பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டைப்பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி நகர்த்தக்கூடிய சிறந்த அணியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கு முன் வாக்களிப்பதன் மூலம் சிரமத்துடன் கட்டமைத்த பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள் என அனைத்து மக்களையும் கேட்டுக் கொண்டார்.
யாப்பாஹுவில் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “தபால் வாக்குகள் எனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்தது. எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த நாட்டில் தேர்தலை நடத்தும் நிலை இருக்கவில்லை. மாறாக எரிபொருள், மருந்து, கேஸ் ஆகியவற்றை தேடி அலையும் காட்சிகளையே காண முடிந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூட ஒரு தலைவரும் இருக்கவில்லை. போஸ்டர் அடித்தும் கூட தலைவர்களைத் தேட முடியாமல் இருந்தது.
நாட்டை கடந்த இரு வருடங்கள் சரியாக வழி நடத்தியதாலேயே தேர்தல் நடத்தும் நிலைக்கு வந்திருக்கிறோம். எரிபொருள்,கேஸ், உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை இல்லாது செய்து நாட்டில் நிலைத் தன்மையை நாம் ஏற்படுத்தினோம்.
நாட்டிலுள்ள விவசாயிகள் வழங்கிய பங்களிப்பே அதற்கு முக்கிய காரணமாகும். நான் பொறுப்பேற்ற வேளையில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி சரிவடைந்திருந்தது. அமெரிக்கா, உலக வங்கியுடன் பேசி விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுத்தேன். விவசாயிகளும் பிரதி உபகாரம் செய்தனர். அதற்காக நன்றி சொல்கிறேன்.
பின்னர் சுற்றுலாத்துறையை பலப்படுத்தி நாட்டை கட்டியெழுப்பினோம். இன்று போட்டியிட வந்திருக்கும் 38 பேரும் நாடு நெருக்கடியிலிருந்த போது நாட்டை மீட்க வரவில்லை. விவசாயிகளே அதற்காக பாடுபட்டனர். இலங்கை வங்குரோத்தடைந்தது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் உதவியுடன் இன்று மீண்டு வருகிறோம்.
இன்றும் மக்களுக்கு கஷ்டம் உள்ளது. அதேபோல் நாட்டை மீட்க மக்கள் சுமைகளை தாங்கிக் கொண்டனர். அதற்காக நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்கிறோம். மக்களுக்கு நன்றிக்கடனாகவே குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணங்களை வழங்குகிறோம்.
பொருட்களின் விலையை ஓரளவு குறைத்திருக்கிறோம். இன்றும் மக்களுக்கு கஷ்டங்கள் உள்ளன. எனவே இனிவரும் காலத்தில் நாம் எவ்வாறு முன்னேறிச் செல்லலாம் என்பதை இலக்கு வைத்தே எனது திட்டங்களை முன்வைத்திருக்கிறேன்.
எனது தேர்தல் விஞ்ஞாபனம் பிரதான ஐந்து விடயங்களை இலக்காக கொண்டதாக அமைந்திருக்கிறது. எதிர்கட்சிகள் இன்று வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் தருவதாக கூறுகின்றனர். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி சரிவு கண்டமைக்கு காரணமும் வரி குறைக்கப்பட்டதாகும்.
வரியைக் குறைத்தால் வௌிநாட்டு கடன்களைப் பெற வேண்டியிருக்கும். மீண்டும் பணம் அச்சிட வேண்டியிருக்கும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்திருப்பதால் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும். அதற்காக விவசாய செயற்பாடுகளை நவீனமயப்படுத்துவோம்.
மேலும், மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக நாட்டின் நெல் உற்பத்தியை அதிகப்படுத்த வழி செய்வோம். நாம் விவசாயிகளை வறுமையையில் வைத்திருக்கும் முயற்சிகளை நாம் விரும்பவில்லை. மற்றையவர்கள் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களை தொடர்ந்து கஷ்டத்தில் வைத்திருக்க முயற்சிக்கிறார்கள்.
உலகின் உணவுத் தேவைக்கு நாம் உணவு விநியோகிக்க வேண்டும். எமது உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்கினால் உலகில் மற்றுமொரு தொகுதியின் உணவுத் தேவைக்கு பங்களிப்புச் செய்ய முடியும். அதற்கான தெரிவுகளையும் தொழில்நுட்பங்களையும் அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து உங்களுக்கு பெற்றுத்தரும்.
அதேபோல் மரக்கறி, பழ உற்பத்திகளையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக குளிரூட்டும் வசதிகளையும் அரசாங்கம் பெற்றுத்தரும். அதனால் உலக உணவுத் தேவைக்குப் பங்களிப்பு செய்து நாம் வௌிநாட்டு வருமானத்தை ஈட்ட முடியும். அதனால் வறுமையான பிரதேசங்களில் வாழும் மக்கள் கஷ்டத்திலிருந்து மீள முடியும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜேவீபிக்கும் எந்த திட்டமும் இல்லை என்பதை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபங்களே உறுதிப்படுத்துகின்றன. அவர்களிடம் புதிய திட்டங்கள் இல்லை. அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல திட்டங்களையும் எதிர்க்கின்றனர்.
எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் துறை தொழில்களுக்கு புதியவர்களை இணைப்போம். அவர்களுக்கான பயிற்சிகால கொடுப்பனவுக்கும் அரசாங்கம் பங்களிப்புச் செய்யும். சுய தொழில் முயற்சிகளுக்கும் அரசாங்கம் நிதி நிவாரணங்களை வழங்கும். விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான உதவிகளையும் அரசாங்கம் வழங்கும்.
சுற்றுலா அபிவிருத்திக்கான திட்டங்களும் எம்மிடம் உள்ளன. இன்றளவில் நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்கள் என்னிடமே உள்ளன. மற்றையவர்கள் வாய்ப்பேச்சினால் சாதிக்கப் பார்க்கிறார்கள்.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியினர் உண்மை நிலவரத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஜே.ஆர்.ஜயவர்தன, டீ.எஸ்.சேனநாயக்க, பிரேமதாச போன்ற தலைவர்களின் வழியிலேயே நான் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டேன். டீ.எஸ். சேனநாயக்கவை தவிர மற்றைய அனைவரையும் நான் அறிவேன். பண்டாரநாயக்கவையும் அறிவேன். பிரேமதாசவிற்கு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையில் நானே கட்சியைப் பாதுகாக்க வழி செய்தேன்.
அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து கட்சியின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். ஜே.ஆர்.ஜயவர்தனவை போல எனக்கும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
சஜித் பிரேமதாச தற்போது ஐக்கிய தேசிய கட்சி இல்லை. அவரால் அனுகுரமார திசாநாயக்கவை தோற்கடிக்க முடியாது. சஜித் பிரேமதாசவே அனுரகுமார திசாநாயக்கவைப் பலப்படுத்தினார். இதுவரையில் இலங்கையில் ஆட்சி செய்தவர்கள் ஆளும் தரப்பை மிஞ்சி செல்ல இரண்டாம் தரப்புக்கு இடமளிக்கவில்லை. அதேபோல் எதிர்கட்சிகளும் தம்மை மிஞ்சி செல்ல மற்றுமொரு தரப்புக்கு இடம் கொடுக்கவில்லை.
ஜே.ஆர்.ஜயவர்தன, சிறிமாவோ போன்வர்களும் அதனையே செய்தனர். நான் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் ஜே.வீ.பிக்கு இடமளிக்கவில்லை. அதனால் அனுரகுமார திசாநாயக்க மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக செயற்பட்டார். அவரின் காலத்தில் விவசாயம் பலப்படுத்தப்பட்டது என்று சொன்னால் மக்கள் வேடிக்கையாக சிரிக்கின்றனர்.
அதனால் எமது காலத்தில் மற்றைய தரப்பினர் எழுந்து வருவதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் ஜேவீபியை கட்டி வைத்திருந்தோம். சஜித் பிரேமதாசவால் அதனை செய்ய முடியாமல் போனது. பாராளுமன்றத்தில் சென்று வீண் பேச்சு பேசுவார். நாளாந்தம் ஒரு மணித்தியாலம் பேசிக்கொண்டிருப்பார். அதனால் நுற்றுக்கு 2 சதவீத ஆதரவு இருந்த அனுரகுமார எழுந்து வந்திருக்கிறார்.
அதனால் சஜித் இன்று அனுரவோடு போராட வேண்டிய நிலை வந்துள்ளது. சஜித் வெல்லப்போவதில்லை. சஜித்துக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் அனுரவை பலப்படுத்தும். அதனால் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சியினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அதேபோல் செப்டெம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது செழிப்பும் இருக்காது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்ச ஷெஹான் சேமசிங்க, “இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வாய்ப்பு எமது அரசாங்கத்திற்கு கிடைத்தது. இன்று சஜித் அனுர போன்றவர்கள் வாக்கு கேட்கிறார்கள். அன்று அவர்கள் எரியூட்டிய நாட்டில் நெருப்பை அணைத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. எனவே, இன்னும் ஐந்து வருடங்கள் ரணில் ஆட்சி நடந்தால் மட்டுமே இலங்கைக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்.
இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய தீர்மானித்துள்ளார். அதற்கான நிதியை தேடிக்கொள்ளும் இயலுமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது என்பதையும் ஜனாதிபதி நிரூபித்துள்ளார். இலங்கைக்கு நிகராக சரிவடைந்த நாடுகள் இன்றும் தடுமாறும் வேளையில் இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் குறுகிய காலத்தில் மீட்டிருக்கிறார்.
அதனால் அவரின் பொருளாதார கொள்கைகள் முன்னோக்கி கொண்டு சென்றால் மட்டுமே இலங்கைக்குப் பாதுகாப்பான எதிர்காலம் இருக்கும். மாற்று வழியில் ஓட முற்பட்டால் சர்வதேச உதவிகளை இழந்து தவிக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், “இன்றைய தேர்தலில் இரண்டு குழுக்கள் மட்டுமே உள்ளன. ஒரு குழு நாட்டை சரிவிற்குள் தள்ளப் பார்க்கிறது. ஜனாதிபதி நாட்டை மீட்கப் பார்க்கிறார். எனவே மீண்டும் இருள் யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
இன்று பேஸ்புக்கிலும், ஜோதிடம் கூறுபவர்கள் வழியாகவும் பலர் தேர்தலை வென்றுள்ளனர். ஆனால் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்படும். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் வாக்களிப்பர்.” என்றார்.
– பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, “நாடு நெருக்கடியில் இருந்தபோது நாட்டை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் எதிர்கட்சித் தலைவர் சஜித்துக்கு இருக்கவில்லை. அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இல்லாவிட்டால் நாமும் பங்களாதேஷ் போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்போம். அதனால் அடுத்த ஐந்து வருடங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் அமர்த்த நாட்டு மக்கள் வழி செய்ய வேண்டும்.” என்றார்.
ஊடகப் பிரிவு
Ranil 2024 – இயலும் ஸ்ரீலங்கா