சிங்கபூருக்கு எதிரான போட்டியில் 10 ஓட்டங்களுக்குள் சுருண்டு மோசமான சாதனை படைத்த மொங்கோலியா
ரி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓட்டங்களை பெற்று மொங்கோலியா அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
சிங்கப்பூர் அணிக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண ஆசிய ஏ போட்டியில் தகுதிச் சுற்றில் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து மொங்கோலியா அணி மோசமான சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஆடவர் ரி20 போட்டியில் பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்டங்களை மொங்கோலியா சமன் செய்தது.
கடந்த ஆண்டு ஸ்பெயினுக்கு எதிராக ஐல் ஆஃப் மேன் பதிவு செய்த இந்த மோசமான சாதனையை மொங்கோலியா சமன் செய்திருந்தது. 11 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தில் சிங்கப்பூர் அணி ஐந்து பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றிபெற்றது.
எவ்வாறாயினும், மொங்கோலியா விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் அணி சார்பாக ஹர்ஷா பரத்வாஜ் நான்கு ஓவர்களில் மூன்று ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இது ரி20 போட்டிகளில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகும். மொங்கோலியா அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.