ஜனாதிபதித் தேர்தல் தமிழ் வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு விமர்சனம் தெரிவிக்கும் முபாறக் அப்துல் மஜீத்..!
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது என ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்னமும் தமிழ் தரப்பினர் சிங்கள இனவாதிகள் போன்றே சிந்திப்பது தெரிகிறது.
தமிழரின் சுயாட்சி என்பது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை எல்லையாக கொண்டது என்பதன் மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்த முனைகின்ற செயலையே தொடர்ந்தும் செய்கின்றனர்.
100 வீதம் தமிழ் பேசுவோர் வாழும் கல்முனையில் ஒன்றாய் வாழ முடியாமல் கல்முனையை இனரீதியில் பிரிக்க கோரியுள்ளனர்.
மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம் என்றும் அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு முஸ்லிம்கள் விரும்பும் தீர்வை வழங்க அல்லது அவை அத்தீர்வுக்கு ஒத்துழைக்க தாம் தயார் என்று கூட சொல்லாமல் வடக்கு கிழக்குக்குள் முஸ்லிம்களை எப்படி அடிமைகளாக வாழ வைப்பது என்று இனித்தான் பேசப்போகிறார்களாம்.
தமிழ் பேரினவாதம் என்பது சிங்கள பேரினவாததை விட கொடூரமாக உள்ளது.
(முபாறக் அப்துல் மஜீத்)