சைக்கிளில் இலங்கையை சுற்றி வரும் கிண்ணியா வயோதிபருக்கு பேருவளையில் வரவேற்பு..!
இலங்கையை சைக்கிள் வண்டி மூலம் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியொன்றை திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
கிண்ணியா ரைடர் என்றழைக்கப்படும் முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வாறு ஈடுபட்டுள்ளார். 1500 கிலோ மீட்டர் தூரத்தை துவிச்சக்கர வண்டி மூலம் பயணித்து சாதனையை நிறைவேற்றவுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலிருந்து பயணத்தை துவங்கியுள்ள இவர் கிளிநொச்சி, முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார், அநுராதபுரம், புத்தளம், கம்பஹா, கொழும்பு வழியாக வந்து (01-09-2024) பேருவளையை வந்தடைந்துள்ளார்.
இவருக்கு மக்கொனை மற்றும் பேருவளை சீனங்கோட்டைப் பகுதிகளில் பெரு வரவேற்பளிக்கப்பட்டது. (02-09-2024) காலி மற்றும் மாத்தறையை நோக்கிப் பயணமானார்.
ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு வழியாக மீண்டும் திருகோணமலை மாவட்டத்தை சென்றடையவுள்ளார்.
சீனங்கோட்டை பத்தை இரத்தினக்கல் வர்த்தக சந்தை பகுதிக்கு வந்த அவருக்கு அங்கும் வரவேற்பளிக்கப்பட்டது.
இப்படியான வயோதிப வயதில் சாதனை நிலைநாட்டும் கிண்ணியா ரைடருக்கு சீனா நாட்டு இரத்தினக்கல் வர்த்தகர்களும் பாராட்டினர். மேல்மாகாண சபை முன்னால் உறுப்பினர் எம்.எம்.எம் அம்ஜாத்,சமூக சேவையாளர்களான அஸ்வர் வபா மற்றும் நப்ஹான் சிஹாப்தீன் உட்பட பல பிரமுகர்கள் இவரை பேருவளை ஸாரா மண்டபத்திலிருந்து காலிப்பகுதியை நோக்கி வழியனுப்பி வைத்தனர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)