தூய்மையான ஆட்சியை சஜித் முன்னெடுப்பார்; பேருவளையில் முஜிபுர் ரஹ்மான்
இந் நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி ஸஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பேருவளையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ஸஜித் பிரேமதாஸவே நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் சிறுபான்மை ஙமூகத்தின் முழுமையான பங்களிப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். பேருவளை சேக் ஜமால்தீன் வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பேருவளை நகர சபை ஐ.ம.சக்தி வேட்பாளர் இர்சாத் நளீம் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதியுடன் நல்லதொரு குழு இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆதரவு அவசியமெனவும் கூறுகிறார். ஜனாதிபதியை படை சூழ திருடர்களே உள்ளனர். சீனி, தேங்காய் எண்ணெய், வெள்ளைப்பூடு ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இன்று ஜனாதிபதியின் பக்கமே உள்ளனர். தரக் குறைவான மருந்து வகைகளை கொண்டு வந்து மக்களை கொன்றவர்கள் இன்று சிறையில் உள்ளனர். திருடர்களை பாதுகாக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். திருடர்களையும், திருடர்களை காப்பாற்றுவோரையும் இத்தேர்தலில் மக்கள் சரியாக இனம் காண வேண்டும்.
மூவின மக்களும் இன்று ஸஸித் பிரேமதாஸவின் வெற்றிக்காக ஓரணியில் அணி திரண்டுள்ளனர். நாட்டில் 21ம் திகதிக்குப் பின் ஸஜித் பிரேமதாஸ தலைமையில் தூய்மையான ஆட்சி நாட்டில் இடம் பெறும்.
ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பவர்களுடன் முஸ்லிம்கள் ஒரு போதும் கை கோர்க்கக் கூடாது. பாராளுமன்றத்தில் ஒன்றும் அதற்கு வெளியே வேறு ஒன்றும் கதைத்து முஸ்லிம்களை நோவினை செய்யும் சிவப்பு நிற சகோதரர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தலில் அவர்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள். நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.
ராஜபக்ஷாக்களுடன் இருந்த திருடர்கள் இன்று ஜனாதிபதியுடன் கை கோர்த்துள்ளனர். ஜனாதிபதி திருடர்களைப் பாதுகாத்து வருகிறார். அநுர குமார திஸாநாயக்கவிடம் ஊழல், லஞ்சம் தொடர்பான பைல் கோவைகள் இருப்பதாக கூறுகிறார். ராஜபக்ஷாக்களினதும் அவரின் அருடிவருடிகளினதும் பைல் கோவைகளாகத்தான் இருக்கும். இவர்கள் இன்று யாருடன் உள்ளனர் என்பதை பாருங்கள்.
இக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜமீல், ஐ.ம.ச நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டொக்டர். ரூமி ஹாஷிம், முன்னாள் எம்.பி அஸ்லம் ஹாஜியார், நகர சபை வேட்பாளர்களான தேசபந்து ஏ.பி.எம் ஸுஹைர் இர்சாத் நளீம், முன்னாள் பிரதேச சபை உப தலைவர் பர்னாட் ரஞ்சித் உட்பட பலரும் பேசினர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)