மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ மக்கள் மயப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பணிவான வேண்டுகோள்..!
அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப்மார்கள், இமாம்கள், ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் நிர்வாகிகள் ஆகியோரிடம் பின்வரும் வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
ரபீஉனில் அவ்வல், இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு இம்மாதத்தின் விஷேட அம்சங்களில் ஒன்றாகும்.
அந்தவகையில், நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸீராவை வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதும் அவர்களது ஸுன்னாவை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில் விருப்பத்தை உண்டுபண்ணுவதும் அவர்கள் மீதான எல்லையற்ற அன்பை மனிதர்களின் உள்ளங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் எமது கடமையும் காலத்தின் தேவையுமாகும்.
அதனடிப்படையில் மஸ்ஜித்களை மையப்படுத்தி ஐவேளை தொழுகைகளில் மக்கள் அதிகம் வருகை தரும் தொழுகைகளை கருத்திற்கொண்டும் மக்களது ஏனைய அமல் இபாதத்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையிலும் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ அறிமுகம் செய்து மக்கள் மயப்படுத்துமாறு வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.
இது தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவினால் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக்கிளைகளுக்கும் மஸ்ஜித்களில் கடமைபுரியும் இமாம்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாக சபைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.