நாளை பாரம்பரியம் நிகழ்ச்சியில், “கவித்தென்றல்” டீ. ஆப்தீனின் நினைவுகள்
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தனித்துவமான இசைப் பாரம்பரிய வளர்ச்சிக்கு துணை சேர்த்த, இசைத்துறை சார்ந்தோர் வரிசையில், காலஞ்சென்ற கவித்தென்றல் டீ. ஆப்தீன் அவர்களும் ஒருவர். இவரது நினைவுகள், நாளை 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 08.15 மணியளவில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாக இருக்கும் “பாரம்பரியம் நிகழ்ச்சித்” தொடரில் பேசப்பட இருக்கின்றன.
பாடலாசிரியர் டீ. அப்தீன் அவர்கள், அதிகமான இஸ்லாமிய கீதங்கள் எழுதியுள்ளார். பிரபல பாடகர்களான டொனி ஹசன், அக்குறணை அஸீஸ், ‘இசைக்கோ’ நூர்தீன், சுஜாதா அத்தநாயக்க, ராஸிக் ஸனூன், நூர்ஜஹான் மர்சூக், மொஹிதீன் பெய்க், ஏ.எம்.எம். மொஹிதீன் போன்ற அதிகமானோர், இவர் எழுதிய இஸ்லாமிய கீதங்களை முஸ்லிம் சேவையில் பாடியுள்ளார்கள்.
அத்தோடு, இதே நிகழ்ச்சியில் முஸ்லிம் சேவைக்கு இசைத்துறைக்குப் பங்களிப்புக்கள் வழங்கிய இன்னும் பல கலைஞர்களும் நினைவு கூரப்படுகிறார்கள். அதிதிகளாக பாடலாசிரியர் டீ. ஆப்தீன் அவர்களின் புதல்வர் முஹம்மத் இம்ரான் ஆப்தீன், பாடகர் ‘கலாபூஷணம்’ எம்.சீ. முஹம்மத் அலி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியினை, எம்.எஸ்.எம். ஜின்னாஹ் தொகுத்தளிக்க, முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் பாத்திமா ரினூஷியா தயாரித்தளிக்கிறார்.
( ஐ. ஏ. காதிர் கான் )