மீடியா போரத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளராக ரஷீத் எம்.றியாழ் நியமனம்
சுதந்திரப் பத்திரிகையாளரும் கவிஞரும் எழுத்தாளரும் எழுத்தணிக் கலைஞருமான ரஷீத் எம். றியாழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை, அண்மையில் கொழும்பு ஜமா – அத்தே இஸ்லாமி தலைமையக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, போரத்தின் தலைவர் என். எம். அமீன் வழங்கி வைத்தார்.
“தினகரன் வார மஞ்சரி” யில் கடந்த சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ‘கவிதை பூங்கா’ எனும் பக்கத்துக்குப் பொறுப்பாசிரியராக இருந்து வந்துள்ள ரஷீத் எம். றியாழ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தின் மலையக வானொலி சேவையில் ‘வசந்த வாசல்’ எனும் கவிதா நிகழ்ச்சியயையும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நடாத்தி வந்தார்.
இவர், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரான சரத் ஏக்கநாயக்கவின் ஊடக இணைப்பதிகாரியாகவும், இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியவர். மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அஹதிய்யா சன்மார்க்கப் பாடசாலை ஆசிரியர் பயிற்சி முகாம்களையும், இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளையும், ஊடகப் பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தவர்.
கல்வி அமைச்சு மற்றும் தேசியக் கல்வி நிறுவகம் என்பவற்றின் ஊடாக, நாட்டின் பல பகுதிகளிலும் ஆசிரியர் பயிற்சி நெறிகளையும் நடத்தியவர்.’வளர்பிறை கலா மன்றம்’, ‘அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம்’ ஆகிய இலக்கிய அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் கவிஞர் ரஷீத் எம். றியாழ், கண்டி நகரிலும் கண்டியை அண்மித்த பல இடங்களிலும் இலக்கியக் கருத்தரங்குகளையும் கவியரங்குகளையும் இலக்கிய விழாக்களையும் நடாத்தியுள்ளார்.
‘கவிதை, கட்டுரை, பேச்சு, சிறுவர் இலக்கியம் எழுத்தணிக் கலை, அறிவிப்புக் கலை’ முதலான பல துறைகளில் இளைஞர் விருதுகளையும், ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார். அகில இலங்கை சமாதான நீதவானான கவிஞர் ரஷீத் எம். றியாழ், கண்டி உடுதெனியவைச் சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் ரஷீத் – உம்மு சல்மா ரஷீத் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வருமாவார்.
( ஐ. ஏ. காதிர் கான் )