கல்பிட்டியில் 1 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கல்பிட்டி பிரதேசத்தின் குறிஞ்சிப்பிட்டி மற்றும் சின்னக்குடிருப்பு ஆகிய இடங்களில் நேற்று (1) கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் ஒரு கெப் வண்டியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜயா மற்றும் புத்தளம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, கடற்படை மற்றும் பொலிஸ் பணியாளர்கள் குறிச்சிம்பிட்டி பகுதியில் ஒரு வண்டியை சோதனையிட்டதில், சுமார் 800 கிராம் கேரளா கஞ்சா விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் கெப் ரக வாகனம் மற்றும் கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சின்னக்குடியிருப்பு பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலதிகமாக 200 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் என நம்பப்படுகிறது. இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்பிட்டி சின்னக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் கெப் வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதீக விசாரனைகளை கல்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.