எழுத்தாளர் நூலாசிரியை கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மிலின் “மஞ்சள் மாம்பூ” ஹைக்கூ நூல் தமிழ்நாடு புதுச்சேரியில் வெளியீடு
இந்தியா, தமிழ் நாடு “நூலேணி” பதிப்பகமும், “துளிப்பா” வரலாற்று ஆவண இதழும் இணைந்து, புதுச்சேரியில் “சர்வதேச ஹைக்கூ” மாநாட்டை, (2024 ஜூன் 23) மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்தியது.
இந்த ‘உலகத் துளிப்பா’ மாநாட்டில், சுமார் ’70 ஹைக்கூ கவிதை நூல்கள்’ வெளியீட்டு வைக்கப்பட்டமை மிகவும் சிறப்பான விடயமாகும்.”தமிழ் ஹைக்கூ” வரலாற்றில் முதல் முயற்சியாக இவ்விழா, “ஹைக்கூ நூல்கள்” வெளியான 40 ஆண்டு (1984-2024) கொண்டாட்டமாக இடம்பெற்றது பாராட்டத்தக்கது.
இந்த அரங்கேற்றத்தில், ‘சர்வதேச ஹைக்கூ’ ஆர்வலர்கள் (அமெரிக்கா, மலேஷியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஐக்கிய அமீரகம், இந்தியா)
பங்குகொண்டு சிறப்பித்தனர்.
இம்மாபெரும் விழாவில், இலங்கை எழுத்தாளர் கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் மூன்றாவது நூலான “மஞ்சள் மாம்பூ” – ஹைக்கூ நூல் வெளியீடு கண்டது. ஒரே மேடையில் ’70 நூல்கள் வெளியீடு’ கண்ட இம்மாபெரும் விழாவில், ‘தமிழ் ஹைக்கூ முதுசம்’ கவிஞர் அமுத பாரதி ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள, ‘பன்னாட்டு ஹைக்கூ’ கவிஞர்கள் பலரும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
நூல் வெளியீடு செய்த அனைத்து கவிஞர்களுக்கும், இவ்விழாவில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதோடு, “துளிப்பா பேரிகை” எனும் விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இம்மகாநாடும் நூல் வெளியீடும், ஒரு சாதனை நிகழ்வாக “ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு” – “ALL INDIA BOOK OF RECORDS” இல் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில், அனைத்து கவிஞர்களுக்கும் “ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு” குழுவினரால் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இம்மாபெரும் நிகழ்வை, திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயலாக்கத்திற்கான சகல விதமான முயற்சிகளையும் மேற்கொண்ட, ‘நூலேணி பதிப்பகம்’ உரிமையாளர் கவிஞர் திரு கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கும், ‘மழை துளிப்பா’ இதழ் ஆசிரியர் ‘பாவலர்’ புதுவைத்தமிழ் நெஞ்சன் ஐயா அவர்களுக்கும், தனது மனமார்ந்த நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக, கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் கூறினார். அத்துடன், இம்மாநாட்டில் நூல் வெளியிட்ட அத்தனை படைப்பாளர்களுக்கும் மனதினிக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, இச்சிறப்பு நிகழ்வில், வெளியிடப்பட்ட ’70 தனி நபர் நூல்கள்’ பற்றிய தகவல்கள் அடங்கிய நூல்’ மிக விரைவில் வெளிவர இருப்பதாக, ‘நூலேணி பதிப்பகம்’ உரிமையாளர் கன்னிக்கோவில் ராஜா குறிப்பிட்டார். இது தவிர இந்த நூல், ஆய்வு செய்பவர்களுக்கும் ‘ஹைக்கூ’ வை விரும்புபவர்களுக்கும் பேருதவியான சிறந்த கையேடாக வெளிவரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )