விளையாட்டு

இலங்கைக்கு எதிராக அட்கின்ஸனின் சகலதுறை மற்றும் ஜோ ரூட்டின் அடுத்தடுத்த சதங்களால் தொடரை வென்றது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டின் இரு சதங்கள் மற்றும் அட்கின்ஸனின் சகலதுறை அசத்தல் ஆகியன கைகொடுக்க 190 ஓட்டங்களால் இலகு வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என கைப்பற்றியது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 1:0 என முன்னிலையுடன் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் 29ஆம் திகதி ஆரம்பித்த 2ஆவது போட்டி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்திருந்தது.

இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியிருந்தது. இதற்கமைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட் பெற்றுக் கொடுத்த 143 ஓட்டங்கள் மற்றும் அட்கின்ஸன் பெற்ற 118 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 427 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு முன்வரிசை வீரர்கள் ஏமாற்றம் கொடுக்க மத்திய வரிசையில் வந்த கமிந்து மெண்டிஸ் மாத்திரம் பொறுப்புடன் ஆடி 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 196 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் 231 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஜோ ரூட் இந்த இன்னிங்ஸிலும் 103 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அசித மற்றும் லஹிரு ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 483 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான திமுத் கருணாரத்ன 55 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 58 ஓட்டங்களையும், அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா 50 ஒட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுக்க மற்றைய வீரர்கள் ஏமாற்றம் கொடுக்க இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 292 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 190 ஓட்டங்களால் தோற்றுப் போனது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2:0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியின் சார்பில் பந்துவீச்சில் அட்கின்ஸன் 5 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார். இப்போட்டியின் நாயகனாக இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் 132 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளரான அட்கின்ஸன் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் இலங்கை அணி தோற்றமையால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 7ஆம் இடத்திற்கு கீழிறங்கியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *