யுனைடட் வெற்றிக்கிண்ணம் கல்பிட்டி பனாக்கோ அணி வசமானது
யுனைடட் கல்பிட்டி விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் கல்பிட்டி யுனைடட் உதைப்பந்தாட்டக் கழகத்தை 1:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கல்பிட்டி பனாக்கோ உதைப்பந்தாட்ட அணி சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது.
யுனைடட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட தைப்பந்தாட்டத் தொடர் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 (இன்று) ஆகிய இரு தினங்களாக கல்பிட்டி அல் மனார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 21 உதைப்பந்தாட்டக் கழகங்கள் பங்கேற்றிருந்தன.
விலகல் முறையில் இடம்பெற்ற இத் தொடரில் 4 குழுக்கலாக போட்டியில் பங்கேற்ற அணிகள் பிரிக்கப்பட்டு இத் தொடரில் பங்கேற்றிருந்தன. அதற்கமைய இன்றைய தினம் (1) பிற்பகல் 5.15 மணிக்கு ஆரம்பித்த இறுதிப் போட்டியில் கல்பிட்டிப் பிரதேசத்தின் தலைசிறந்த இரு அணிகளான பனாக்கோ மற்றும் கல்பிட்டிய யுனைடட் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
விறுவிறுப்பாக ஆரம்பித்த இறுதிப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் கல்பிட்டி யுனைடட் அணி வீரர்கள் கோலுக்கான முயற்சியில் தீpரம் காட்டினர். இருப்பினும் பனாக்கோ அணியின் தடுப்பு வீரர்களை கடந்து அவர்களால் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியாமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி சமநிலை பெற்றது.
பின்னர் ஆரம்பித்த தீர்மானமிக்க 2ஆவது பாதி ஆட்டத்தில் பனாக்கோ வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் தனக்குக் கிடைத்த பந்தினை பனாக்கோ அணியின் வவீரரான அஹதிர் நேர்த்தியாக உயர்த்தி கம்பத்தினுள் அனுப்பி வைக்க முதல் கோலை பதிவு செய்த பனாக்கோ அணி 1:0 என முன்னிலை பெற்றது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் யுனைடட் வீரர்களின் கோலுக்கான முயற்சி கைகொடுக்காமல் போக போட்டியின் முழு நேரம் முடிவில் 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பனாக்கோ அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
அதற்கமைய சம்பியனாக தெரிவான பனாக்கோ அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் ஐம்பது ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. அத்துடன் 2ஆம் இடம்பெற்ற யுனைடட் அணிக்கு 2ஆம் இடத்துக்கான கிண்ணத்துடன் 25000 ரூபா ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. மேலும் அத் தொடரில் 5 கோல்களை அடித்த பனாக்கோ அணியின் வீரரான அஹதிர் இறுதிப் போட்டியின் நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விசேட அதீதிகளாக இப்போட்டிக்கு அனுசரனை வழங்கியவர்களுடன் கல்பிட்டிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிரிசிங்க பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)